Skip to main content

ஆழ்ந்த அன்புள்ளங் கொண்டவர் - ஸ்ரீலஸ்ரீ சோமஸ்கந்த தண்டபாணிக தேசிகர்

அமரர் திருவாளர் சிவச்சந்திரதேவன் அவர்கள் எமது ஆதீனமான புற்றளை சித்தி விநாயகர் தேவஸ்தான பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் உபயகாரரும் கந்தபுராணப் படிப்பில் முருகன் - வள்ளியம்மை திருமண உபயகாரருமான அமரர்களான வயிரவிப்பிள்ளை அன்னம்மா தம்பதியரின் சிரேஷ்ட  புத்திரராவார். எமது குடும்பத்தின்மீது ஆழ்ந்த அன்பு கொண்ட இவர் 23.05.2020இல் இறைபதம் அடைந்ததையிட்டு எனதும் எம் குடும்பத்தினரதும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அமரர் அவர்கள் 17.12.1950இல் அவதரித்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர்,  தட்டச்சு - சுருக்கெழுத்துக் கலையிலும்  மிகுந்த பாண்டித்தியம் பெற்று, ஆசானாகவும் திகழ்ந்தவர். அத்துடன் தட்டச்சு - சுருக்கெழுத்து வகுப்புக்கள்  பலவற்றைத் தொடர்ச்சியாக நடாத்தியதுடன், பல பயிலரங்குகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்து பயனாளிகளைச் சிறந்தமுறையில் பயன்பெற வைத்தவர். இவர் மக்கள் வங்கியில் அந்தரங்கச் செயலாளராகக் கடமையாற்றியதுடன் சிரேஷ்ட கிளை முகாமையாளராகவும் சேவையாற்றினார். இவர் மூன்று ஆண் செல்வங்களுக்கும் ஒரு பெண் மகவுக்கும் தந்தையானவர். இவரது துணைவியார் திருமதி கிருஷ்ணகுமாரி சிவச்சந்திரதேவன் அவர்கள் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.

அமரர் வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் அவர்களது சபிண்டீகர தினத்தில் அவரது குடும்பத்தினரோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய புற்றளை சித்திவிநாயகரையும் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மனையும் பிரார்த்தித்து நிறைகின்றேன்.

ஸ்ரீலஸ்ரீ சோமஸ்கந்த தண்டபாணிக தேசிகர், JP
இந்துமத குருபீடாதிபதியும் 
புற்றளை சித்திவிநாயகர் தேவஸ்தான ஆதீன கர்த்தாவும் 
வல்லை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் பிரதம குருவும்

Comments