Skip to main content

அமரர் வ. சிவச்சந்திரதேவன் ஒரு நல்ல உள்ளம் சிவனடியில் உறங்குகிறார் - க.இராசரத்தினம்

இலங்கைத் திருநாட்டின்  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செழிப்புற விளங்கும் புலோலி தெற்கு, புற்றளையில் திரு. வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் அவர்கள்  17.12.1950இல் பிறந்து  23.05.2020 சனிக்கிழமையன்று இறையடி சேர்ந்தார்கள். அவரது மரணச்செய்தி கேட்டு நாம் அதிர்ச்சியும், ஆறாத கவலையும் அடைந்தோம்.

அமரர் அரசசேவையில் இணைந்து மக்கள் வங்கியில் பதவி வகித்தார்கள். 1987ஆம் ஆண்டு கரவெட்டி பிரதேச செயலகத்தில் திட்டமிடல் உதவிப் பணிப்பாளராக கடமையாற்ற வந்திருந்தபோது என்னைச் சந்தித்து வடமராட்சிச்  சுருக்கெழுத்துக் கழகத்தைப்பற்றிக்  கூறியதுடன், அதன் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுக் கொண்டார்கள். நானும் பூரண ஆதரவு தெரிவித்திருந்தேன். அன்று தொடக்கம் மிகவும் ஐக்கியமாகப் பழகத்தொடங்கினோம்.

சுருக்கெழுத்துக் கழக அங்கத்தவர்களுக்கும், பயிலுநர்களுக்கும்வேலை வாய்ப்புப்பற்றிகருத்தரங்கில் பேசுவதற்கு என்னை வரும்படி அழைத்தார்கள். நான் சம்மதம் தெரிவித்துப் பங்குபற்றினேன். அன்றிலிருந்து நான் கழகத்துடன் ஆழமாக இணைந்து கொண்டேன். இது எனக்குக் கிடைத்த சமூக, பொருளாதாரச் சொத்தாகும்.

திரு. சிவச்சந்திரதேவன் அவர்கள் மக்கள் வங்கியில் வேலை செய்த காலத்திலேயே 1985ம் ஆண்டு வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை ஸ்தாபித்து தமிழ், ஆங்கில தட்டச்சு, தமிழ், ஆங்கில சுருக்கெழுத்துப் பயிற்சிகளை பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவ, மாணவிகளுக்கு ஆரம்பித்து வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அயராது பாடுபட்டு உழைத்தார்கள். இச்செயற்பாடானது ஒரு தூரநோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றுச் சித்தியடைந்தவர்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களிலும், கூட்டுத்தாபனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். குறிப்பாக வடமாகாணம் இலங்கை வங்கிகளில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பைப்  பெற்றது அன்னாரின் ஒரு சாதனையாகும்.  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கவாசகர் அவர்களினால் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் பயிற்சிபெற்று வெளியேறியவர்கள் யாழ். மாவட்ட அரச திணைக்களங்களில் பயிலுநர் களாக நியமிக்கப்பட்டு அனுபவச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அமரர்  வழியமைத்துக் கொடுத்தவர். கழகத்தினூடாக வருடா வருடம் பல்துறைசார்ந்த கருத்தரங்குகளை வைத்து பயிலுநர்களின் அறிவு, ஆற்றலை மேம்படுத்துவதற்கு அயராது உழைத்தவர். வருடாந்தம்  கழக அங்கத்தவர்களுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது அவரின் இறைபக்தியை வெளிப்படுத்திக் காட்டியது.

புலோலி கிழக்கு ஞானசம்பந்தர் கலைமன்றத்துடன் இணைந்து பிற்மன் விழா, ஜோல் முத்தையா நினைவுதினம், தமிழ், ஆங்கில சுருக்கெழுத்துப் போட்டிகளைக் காலத்துக்குக் காலம் நடாத்தி பயிலுநர்களை ஊக்குவித்தவர். இதனால் கலைமன்றத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர். வடமராட்சி இளைஞர், யுவதிகளின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தியதற்கு இவரது சேவைகள் அளப்பரியன. அவை வரலாற்றில் மறக்கமுடியாதவை. அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள் இறைபக்தியும், சமூக மனப்பான்மை யுடனும், சேவை மனப்பான்மையும், நேர்மையும், பழகுவதற்கு இலகுவானவராகவும், இலகுவான வாழ்க்கையை (simple life) மேற்கொண்டவராகவும், எந்த நேரமும் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பவராகவும், யாருடனும் அணுகி அவர்களுடைய சேவையை, உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வல்லமை படைத்தவராகவும் இருந்தார். இவரது சேவை என்ற சொத்து வடமராட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மலை போன்ற ஒரு பாரிய பணியைச் செய்து முடித்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.

மனித வாழ்க்கையில் விதி தனது வேலையைச் செய்து கொண்டி ருக்கிறது. ‘வாழ்வாவது மாயம்இ இது மண்ணாவது திண்ணம்என்றார் அப்பர் சுவாமிகள். ‘எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்என்றார்கள் யோகர்சுவாமிகள். ‘நேற்று இருந்தவர் இன்று இல்லை யென்றார், திருவள்ளுவர். இறப்பு என்பது இயற்கை. ‘பிறந்தன இறக்கும்என்பது ஞானமொழி.

ஆயினும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அவரது அன்பையும், பண்பையும் மறக்க முடியாதுள்ளார்கள். அரசபதவி வகித்தாலும், வசதிகள் இருந்தாலும், அவர் சமுதாயத்தில் எல்லோரி டத்திலும் அன்போடும், பண்போடும் அண்டியவரை ஆதரித்து  சிறந்த நண்பனாக நம் உள்ளங்களிலே நிறைந்து,  வாழ்ந்து மறைந்து விட்டாலும், அவரது நினைவுகள் என்றும் எங்கள்   உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது.

அன்னாரின் அன்பு மனைவிக்கும் பிள்ளைகளுக்கும், சகோதர சகோதரிகளுக்கும், மைத்துனர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.

இறவாத அன்புடன்
.இராசரத்தினம்
ஓய்வு பெற்ற பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்,
கலைமன்றம் வீதி,
புலோலி கிழக்கு,
பருத்தித்துறை.

Comments