Skip to main content

விடாமுயற்சிக்கு உதாரணமான சாதனையாளன் - ஆ. சிவசுவாமி

அமரர் சிவச்சந்திரதேவன் அவர்களை நான் பருத்தித்துறை பிரதேச செயலராகப் பணியாற்றிய காலத்தில் முதன்முதலில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தினூடாக ஆற்றிய பணி தொடர்பில் அடிக்கடி என்னைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. பிரதானமாக சுருக்கெழுத்து, தட்டெழுத்துப் பயிற்சிகளை இந்நிறுவனத்தின் ஊடாக இளஞ்சந்ததியினருக்கு வழங்கும் முயற்சியில் தலைவர், செயலாளர் போன்ற பொறுப்புக்களை ஏற்று இவர் ஆற்றிய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. இவரது விடாமுயற்சியும் இவர் அளித்த ஊக்கவிப்பும் காரணமாக இவருடன் செயற்பட்ட கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் போன்றோர் சிறப்பாக தங்களது பணிகளை ஆற்றினர். இதனால் வருடந்தோறும் பல மாணவர்கள் அரசாங்க பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர்.

“தாளாண்மை என்னும் தகைமைக் கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு”

என்னும் திருக்குறள் பிறர்க்கு உதவும் உயர்ந்த எண்ணம் விடா முயற்சியுடன் உழைப்பவரிடம் உண்டாகும் என்று கூறுவதுபோல, இவரது விடாமுயற்சியுடன் கூடிய உழைப்பும் பிறருக்கு உதவும் உயர்ந்த எண்ணமும் இவரை ஓர் உதாரண புருஷராக வெளிப்படுத்தியுள்ளது எனலாம். இவரால் பயனடைந்த பலரும் தாம் பெற்ற தேர்ச்சியின் காரணமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வெளிக்கள அனுபவப் பயிற்சிகள் பெறவேண்டுமென்ற பெரும் ஆர்வத்தின் காரணமாக பல அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டும் தானே நேரே சமுகமளித்தும் ஏற்பாடுகளைச் செய்வதில் முன்நிற்பார். இவ்வகையில் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும் இவரது மாணவர்கள் இப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் நடத்திய வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வுகள் சிறப்புற நடாத்தப்பட்டுஇ மாணவர்கள் பெற்ற தேர்ச்சிகள் குறித்து கௌரவிக்கப்பட்டு வந்தனர். என்னையும் இந் நிகழ்வுகளில் விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டுமென்று நேரில் வந்து அழைப்பு விடுத்ததையும் மறக்க முடியாது. இவ்வாறு இவரது விடாமுயற்சியின் பலனாக பல இளம் சந்ததியினர் வேலைவாய்ப்பையும் நல்ல வாழ்க்கையையும் பெறமுடிந்தமை இவரது சமூகப்பணிக்குக் கிடைத்த வெற்றியே  எனத் திடமாக நம்பலாம்.

அவர் ஒரு சிறந்த வங்கியாளராக சேவை செய்தவர். அச்சேவை மூலம் அவர் பெற்ற அனுபவமும் அவரது சமூகப்பணிக்கு மிகவும் உதவியதெனலாம். அவரது பாரியாரும் சுருக்கெழுத்தைக் கற்றுத் தேர்ந்து வேலை வாய்ப்பைப் பெற்று பருத்தித்துறைப் பிரதேச செயலகம் உட்பட பல நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்.  இவரது விடாமுயற்சியாலும் இவர் காட்டிய வழியாலும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் மிக நீண்டகாலம் செயற்பட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளது.

அண்மைக் காலங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுருக்கெழுத்தாளர் பதவிகளின் தேவை குறைக்கப்பட்டது. மாற்றுத் தொழில்நுட்ப முறைகள் இடம்பிடித்துள்ளன. அதற்கமைய இந் நிறுவனத்திலும் மாற்றங்கள் செய்யும் தேவை உணரப்பட்டது. எனினும் அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தனது குடும்பத்துடன் கொழும்பில் வாழவேண்டிய தேவை போன்ற காரணங்களால் இந்நிறுவனத்தில் மாற்றங்களைச் செய்யும் வாய்ப்புக் குறைந்திருக்கலாம். எனினும் இந்நிறுவனம் மிகவும் உதாரணமாகச் செயற்பட்ட, எடுத்துக் காட்டான அமைப்பாகச் செயற்பட்ட வெற்றிகர வரலாற்றையுடையது என்பதில் அவர் திருப்திகொண்டிருக்கலாம்.

இவ்வாறு இருக்கையில் நல்ல ஓர் அதிகாரியாகவும் சேவையாளனாகவும் குடும்பத் தலைவராகவும் தந்தையாகவும் சிறந்து விளங்கிய இவர் அமரராகிவிட்டார் என்ற துயரச் செய்தியை அறிந்து கவலையுற்றேன்.

அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

ஓம் சாந்தி!

ஆ. சிவசுவாமி
முன்னாள் பிரதம செயலாளர்,
வடமாகாணம்.

Comments