மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கம், கொழும்பு மாவட்ட வலயம் - 1, 150 வரையிலான பல்லின அங்கத்தவர்களைத் தன்னகத்தே கொண்டு கொழும்பு, தெகிவளை - கல்கிசை மாநகர எல்லைக்குட் பட்ட பிரதேசங்களை வரையறை செய்து வாழிடத்தை அண்மித்துச் சேவைசெய்யும் வலயக்கோட்பாட்டின் அடிப்படையில் 2008ஆம் ஆண்டிலிருந்து தாய்ச்சங்கத்தின் அனுசரணையுடன் இயங்கி வருகின்றமை யாவரும் அறிந்ததே. 2012ம் ஆண்டளவில் அமரர் சிவச்சந்திரதேவன் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட நீண்ட பெருமைமிக்க ஓய்வூதியர் சங்கத்தில் அங்கத்தவராக இணைந்து கொண்டார். அறிந்த அளவில் தனது பிறந்த ஊரான யாழ்ப்பாணம், கல்முனை ஆகிய இடங்களில் பணியாற்றி இளைப்பாறும் காலத்தை நிர்ணயித்த பின்பே கொழும்பு வந்திருந்தார்.
அன்றுதான் அவரை முதன்முதலாக சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். எனினும் தென்மராட்சியைச் சேர்ந்தவன் யான். அவர் வடமராட்சியை சேர்ந்தவர். அவர் பெற்ற கல்வியும் பற்றும் அவரது ஊரையே பெரிதும் சார்ந்திருந்தது. அவர் சுருக்கெழுத்துக்கழகம் ஒன்றினை நிறுவி பல மாணாக்கர்களை உருவாக்கியதில் புகழ் பெற்றவராக எல்லோராலும் அறியப்பட்ட வராக விளங்கினார் என்பதனை அவருடன் பழகிய காலகட்டத்தில் தான் அறிந்துகொண்டேன். எழுபதுகளின் பின் கொழும்பில் இயங்க வேண்டிய கட்டாயத்தினால் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறைந்துவிட்டது. ஒரே ஊர், ஒரே துறை, ஆனால் சந்திக்கும் நிலை ஓய்வின் பின்தான் கிடைத்தது. சிவச்சந்திரதேவன் சுறுசுறுப்பானவர், எல்லோரோடும் அன்பாகப் பழகக்கூடியவர், காலம் அறிந்து செயல்படுபவர், சமூகநலனில் அதீத ஈடுபாடு கொண்டவர். அதனாலேயே எமது தாய்ச்சங்கத்தின் உறுப்பினராக ஓய்வூபெற்ற உடனேயே இணைந்து கொண்டார். அவர் எமது நிர்வாக உறுப்பினராகவும் இணைந்து கொண்டார். எமது அங்கத்தவர்களைக் கௌரவப்படுத்துவதற்காகவும், அவர்கள் நண்பர்களாக இணைந்து அனுபவிப்பதற்காகவும் நடாத்தப்படும் வருடாந்த சுற்றுலாக்கள், மத வழிபாடுகள், சமூக நலன்சார் செயற்பாடுகளில் முக்கியமாக பிள்ளைகளின் கல்வி, பண்பாட்டு மேம்படுத்தல் நடவடிக்கைகளில் எல்லாம் அவரும் இணைந்து கொள்வார். பல அரிய கருத்துக்கள், அறிவுரைகளைப் பகிர்ந்து கொள்வார். தாய்ச்சங்க, வலய வருடாந்த பொதுக்கூட்டங்களிலும் தவறாது பங்கு கொள்வார்.
யாவரும் முதிர்ந்த வயதில் உண்டு, உறவாடி மகிழ்ந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறோம். எமது நிர்வாக உத்தியோகத்தினர் ஏனைய அங்கத்தினர்கள் யாவரும் அன்னாரின் திடீர் மறைவையிட்டு மிகவும் வேதனை அடைகிறோம். அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா அவன் தாளடிசேர வேண்டி நிற்கிறோம்.
க. முத்துக்குமாரு சதானந்தன்
செயலாளர்,
மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கம்,
கொழும்பு மாவட்ட வலயம் - 1.
Comments
Post a Comment