யாழ்ப்பாணம், வடமராட்சியில் நீண்டகாலமாக வாழ்ந்து பின்னர் கொழும்பிற்கு சென்று வாழ்ந்த சிவச்சந்திரதேவன் ஐயா வங்கித்துறை யிலும் சுருக்கெழுத்துத் துறையிலும் மிக உயர்வாக மதிக்கப்பட்ட ஒருவர் எப்பொழுதும் ஓயாது இயங்கிக்கொண்டிருந்த துடிப்பான ஒருவர். தனது குடும்பத்தை எவ்வளவு தூரம் நேசித்தாரோ அவ்வளவிற்கு வடமாராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தையும் நேசித்தார். தனது குடும்பத்தின் உயர்வுக்காக அயராது பாடுபடுவது என்பது சாதாரண மனிதன் ஒருவனின் இயல்பு. அதற்கு ஒருபடி மேலாகவே சிவச்சந்திரதேவன் ஐயா அவர்கள் தனது குடும்பத்தை நேசித்தார் என்பதை நான் அறிவேன். அவர்கள் எனது குடும்ப நண்பர்கள் என்பதால் எனக்கு அது நன்கு புரியும்.
வடமராட்சியில்
இளைஞர், யுவதிகள் பலர் வேலையற்று இருந்தபோது அவர்களுக்கான வேலை வாய்ப்பைப் பெற்றுக்
கொடுக்கும் நோக்கத்தோடு வடமராட்சியில் சுருக்கெழுத்துக் கழகத்தை நிறுவி அதனைத் திறம்பட
நீண்டகாலமாக இயக்கி வந்தார். அங்கு கற்பிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததையும் அவரோடு
நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தமையையும் சிறந்த வாய்ப்பாக உணர்கிறேன்.
வடமராட்சி சுருக்கெழுத்துக்
கழகத்தை சமூகத்தின் உயர் மட்டத்தினர் அங்கீகரிக்கக் கூடிய வகையில் ஒரு நிறுவனமாக மாற்றி, இலாப நோக்கற்ற வகையில் சமூகத்தில் பணியாற்றினார். அது மட்டுமன்றி அங்கு பயின்ற மாணவர்களுக்கு
வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் உயர் பணியையும் ஆற்றினார். அவர் வங்கியில் பணியாற்றியமையும்
சமூகத்தின் உயர் மட்டத்தினரோடு கொண்டிருந்த தொடர்பும் அதற்குச் சாதகமாக அமைந்தன. தனது
நிறுவனத்தில் கல்வி கற்ற அனைத்து மாணவர்களின் குடும்பநிலை பற்றியும் அவர் தெளிவாக அறிந்திருந்தார்.
மாணவர்களின் வறுமை கற்றலுக்குத் தடையாக அமையக் கூடாது என்ற உயர் எண்ணங்கொண்டு பணியாற்றினார்.
பின்னாளில்
கணினித்துறை வளர்ச்சியடைந்தபோது தனது நிறுவனத்தை கணினிப் பயிற்சியளிக்கும் நிறுவனமாகவும்
மாற்றியமைத்துக்கொண்டார். வடமராட்சி சுருக்கெழுத்துக்கழக மாணவர்கள் என்றால் அவர்களைப்
பயிற்சிக்காக எந்த நிறுவனமும் இரண்டாவது பேச்சின்றி உள்வாங்குமளவிற்கு மாணவர்களை ஒழுக்கம்
சார்ந்தும் உயர்வடையச் செய்தார். தன்னோடு பணியாற்றியவர்களை மிக நேசிக்கும் ஒருவராக
இருந்தபோதிலும் அவர்களின் பணிகளில் தொய்வு ஏற்படும்போது அதனைச் சுட்டிக்காட்டி அறிவுரைகூறும்
உயர்ந்த பண்பும் அவரிடத்தில் நான் கண்டுகொண்ட முக்கிய பண்பாகும்.
இவற்றுக்கும்
அப்பால் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளிலும் கூர்மையான பார்வை கொண்டிருந்தார்.
இத்துறை களைச் சார்ந்தவர்களோடு நெருங்கிய உறவைப் பேணியிருந்தார். வடமராட்சி சுருக்கொழுத்துக்
கழகத்தின் ஆண்டுநிறைவு விழாக்கள் மற்றும் ஆண்டு நிறைவு மலர்களின் தரத்திலிருந்து அவற்றைக்
கண்டுகொள்ளலாம்.
கொரோனா தாக்கம்
ஏற்பட்ட பின்னர் அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, “தம்பி எங்கு நிற்கிறீர்கள்? கொழும்பில்
அகப்பட்டுக் கொண்டீர்களா? வீட்டிற்குச் சென்று விட்டீர்களா?” என்றெல்லாம் நலம் விசாரித்தார்.
அந்தளவிற்கு தன்சார்ந்தவர்ளை அக்கறையோடு நேசிக்கும் மனப்பாங்கு பலரிடத்தில் இல்லை என்றே
கூறலாம்.
அவரின் திடீர்
மறைவுபற்றி சில தினங்கள் கழித்தே சமூக வலைத்தளத்தின் மூலம் எனக்கு அறியக் கிடைத்தது அதிர்ந்து போனேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொலைபேசியில் தானாகவே அழைத்து சுகம்
விசாரித்துவிட்டு, "சரி தம்பி சந்திப்போம்” என்ற மனிதருக்கு இப்படி நிகழ்ந்து விட்டதே
என்பது மிகவும் கவலையாக இருந்தது.
அவரது இழப்பு
அவரது குடும்பத்திற்கு மட்டுமன்றி சமூகத்திற்கே பெருமிழப்பு. ஈடுசெய்ய முடியாத இழப்பு
என்று உணர்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.
சாந்தி!
Comments
Post a Comment