Skip to main content

சிறந்த சேவையாளன் - செல்லமுத்து ஸ்ரீநிவாஸன்

திரு.க.வ. சிவச்சந்திரதேவன் அவர்கள் தனது 69ஆவது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தியை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையில் வரப்பெற்ற அனுதாபச் செய்திமூலம் அறிந்துகொண்டபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

16 ஆண்டுகளுக்குமேல் மக்கள் வங்கியில் சுருக்கெழுத்தாளராகக் கடமையாற்றிய அமரர் திரு.க.வ. சிவச்சந்திரதேவன் அவர்கள், 1995ஆம் ஆண்டில் பதவி உயர்வுபெற்றுஇ 2006இல் தாம் ஓய்வு பெறும்வரை மக்கள் வங்கியின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அந்தரங்கச் செயலாளராகக் கடமையாற்றினார். பல்வேறு சமூகப் பணிகளில் அவர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டி ருந்தாலும் வங்கியில் மிகவும் கடமை உணர்வுடனும் அர்ப்பணிப்பு டனும் சேவை புரிந்தார்.

தம் வங்கிக் கடமைகளுக்கு அப்பால், பல்கலைக்கழகங்களுக்கோ ஏனைய கல்வி நிறுவனங்களுக்கோ கல்வி கற்கும் அனுமதி கிடைக்கப் பெறாத இளைஞர் யுவதிகளின் சுபிட்சமான வாழ்வின் பொருட்டு வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை 1985ஆம் ஆண்டில் நிறுவி சிறந்த சமூகப் பணியாற்றினார். கழகத்தில் சுருக்கெழுத்தோடு தட்டெழுத்து, ஆங்கிலமொழி மற்றும் சிங்கள மொழிக் கல்வியையும் புகட்டியதோடு, பிற்காலத்தில் கணினிப் பயிற்சியை வழங்குவதற்கும் நடவடிக்கையெடுத்தார். கழகத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் தமிழ் மொழியிலும் புலமைபெற்று விளங்கினார்கள். கழகத்தில் கல்வி கற்ற மாணவர்கள் பலர் பல அரச திணைக்களங்களிலும் நீதிமன்றங்களிலும் தட்டெழுத்தாளர்களாகவும் சுருக்கெழுத்தாளர்களாகவும் பல ஆண்டுகளாக பரீட்சைகளின் மூலம் தெரிவாகி சிறப்பான சேவையாற்றி வந்தமை இவரது அர்ப்பணிப்பான முயற்சியின் பயனாக விளைந்த பலனாகும். இவருக்கு உறுதுணையாக திரு. குலசிங்கம் அவர்கள் பல வருடங்களாகச் சேவையாற்றியமையும் இவருக்குப் பேருதவியாக அமைந்தது.

கழகத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வந்தன. வடமராட்சி வடக்குஇ வடமராட்சி தெற்கு-மேற்கு உதவி அரசாங்க  அதிபராக, பிரதேச செயலராக நான் கடமையாற்றிய காலப்பகுதியில் கழக நிகழ்வுகளுக்கு நேரில்வந்து அழைப்பிதழ்களைக் கையளித்து, "கட்டாயம் நிகழ்வில் கலந்துகொள்ளவும்" என வற்புறுத்தத் தவறமாட்டார். நிகழ்வுகளின்போது மிகவும் கௌரவமாகவும் பண்புடனும் நடந்துகொள்வார். நான் பிரதேசத்தில் கடமையாற்றாத காலப் பகுதியிலும்கூட நிகழ்வுகட்கு அழைத்துச் சிறப்பிக்க அவர் தவறுவதில்லை. கழகத்தின் பெறுமதிமிக்க பழைய உபகரணங்களை வேறு சமூக நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்குவதற்கும் அவர் பின்நின்ற தில்லை. கழகத்தின் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றே இடம்பெற்றன. நிகழ்வுகளில் சகல பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்துக்கொள்வது அமரரின் அர்ப்பணிப்புமிக்க சேவையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

கழகத்திற்கென ஒரு கீதமும் சின்னமும் உருவாக்கியமை அமரர் கழகத்தை எவ்வாறானதோர் உன்னத நிலையில் வைத்தி ருந்தார் என்ப தற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவர்தம் குடும்பத்தினருக்கும் உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

செல்லமுத்து ஸ்ரீநிவாஸன்
ஓய்வுநிலை மேலதிக அரசாங்க அதிபர்,
கிளிநொச்சி.

Comments