Skip to main content

சமூகத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்த உத்தமர் அமரர் சிவச்சந்திரதேவன்! - சிவஸ்ரீ

ஓய்வுபெற்ற வங்கியாளர், வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் ஸ்தாபகர் அமரர் க.வ.சிவச்சந்திரதேவன் அவர்களின் மறைவு என்னுடைய உள்ளத்தில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகின்றது. கரவெட்டிப் பிரதேச செயலாளராகப் பணிபுரிந்த காலத்தில் அவரை நன்றாக அறிவேன். பதவி வழியாக வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் காப்பாளராகப் பணியாற்றக் கிடைத்ததனால் அவரது பணிகளையும் மாண்புகளையும் அறியவும் புரியவும் வாய்ப்புக் கிடைத்தது. இளம் வயதிலேயே சுருக்கெழுத்தினைப் பயின்று அதன் வழியாய் வங்கிச் சேவைக்குள் இணைந்துகொண்டவர். அவரது திறமையும் ஆளுமையும் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தின் அந்தரங்கச் செயலாளராக அவரை உயர்த்தி அழகு பார்த்தது.

சுருக்கெழுத்தினால் தான் அடைந்த பயனை அடுத்த சமுதாயமும், தலைமுறையும் அடையவேண்டும் என்று நினைத்த கனவான் அவர். அந்தக் கனவின் விளைவாய் 1985ஆம் ஆண்டு வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை ஸ்தாபித்தார். அதன் வழியாக வங்கிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட ஏராளமான அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் இளைய தலைமுறையினருக்கு தொழில்வாய்ப்பை உருவாக்கினார். அறிவையும் தொழிலையும் ஒன்றாக வழங்கிய ஒரு புரவலராக அவர் விளங்கினார். அவர் மீது மற்றவர்கள் காட்டுகின்ற பணிவும் வாஞ்சையும் அவரின் பெருமையை எனக்கு உணர்த்தியிருக்கின்றன.

வங்கியில் பணிபுரிந்த காலங்களில் அவரிடம் கர்வத்திற்குப் பதில் பணிவே காணப்பட்டு இருந்திருக்கின்றது. தனது ஓய்வுக்காலத்தின் பின் இன்னும் முழுமூச்சோடு சுருக்கெழுத்துக் கழகத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டார். ஒரு தனிமனிதன் தனது வாழ்வை மட்டுமல்ல, சமூகத்தின் உயர்வைச் சிந்திக்கும் போதே மானுட வாழ்வின் மகத்துவத்தின் வடிவமாக முடியும். அமரர் அவர்கள் தனது அறிவையும் பணியையும் சமூகத்திற்கு வழங்கி காலத்தால் அழியாது நிலை நிற்கின்றார்.

அன்னாரின் இழப்பு தனியே குடும்பத்தினருக்கு உரியது அல்ல. சமூகத்திற்கு உரிய மாபெரும் இழப்பு. அன்னாரின் இழப்பினால் வாடும் அனைவரது துயரிலும் நானும் இணைந்துகொள்கின்றேன்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

திரு.ச.சிவஸ்ரீ
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
தெல்லிப்பளை.


Comments