எமக்கு
ஆசானாய், நல் வழிகாட்டியாய் அமைந்த
சிவச்சந்திரதேவன் அவர்களின் நினைவுகளை இங்கு பகிர விரும்புகிறேன்.
நான்
1992இல் உயர்தரப் பரீட்சை எடுத்து முடித்து பல்கலைக் கழகக் கற்கை நெறிக்குச் செல்லவிருந்த இடைப்பட்ட காலத்தில் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் தட்டச்சு சுருக்கெழுத்துப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது தட்டச்சும் சுருக்கெழுத்தும் அலுவலகங்களில் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். ஒப்பிரேசன் லிபரேசன், போராட்டக்குழுக்களின் முரண்பாடுகள், இந்திய இராணுவ வருகை, பொருளாதாரத் தடை, இடப்பெயர்வு என
இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு மத்தியில் 80களின் இறுதிக் காலங்களில் இருந்து ஏதோ ஒரு வகையில்
காலத்தால் பின்தள்ளப் பட்டவர்கள் எங்கள் பருவத்தினர். சாதாரணதரப் பரீட்சையிலும் உயர்தரப் பரீட்சையிலும் கற்றலுக்கான சூழலே இல்லாமல் பல நெருக்கடிகளை தாண்டி
வந்தவர்கள். இந்தக் காலங்களில் அரச உத்தியோக வாய்ப்பு
என்பதும் மிகப் போட்டியானதானவே இருந்தது. இந்தக் காலங்களில்தான் சுருக்கெழுத்துக் கழகம் இளைஞர் யுவதிகளுக்குத் தொழிற்பயிற்சியைக் கொடுத்து அவர்களை ஏதோ
ஒரு வகையில் தொழில் வாய்ப்புத் தேட உதவியது. அந்தச்
சுருக்கெழுத்துக் கழகத்தின் வேராய் நின்று எம்மையெல்லாம் வளர்த்தெடுத்தவரே சிவச்சந்திரதேவன் ஐயா அவர்கள்.
சிவச்சந்திரதேவன்
ஐயா அடிப்படையில் மக்கள் வங்கியில் உயர் பதவி வகித்த
ஒரு வங்கியாளராகப் பணிபுரிந்த சமகாலத்தில் கல்வி
மற்றும் சமூகப் பணிகளிலும் காலூன்றியவர். அவர் வட மராட்சி
சுருக்கெழுத்துக் கழகத்திற்கு ஆற்றிய பணிகள் எண்ணுக் கணக்கற்றவை. இக்காலத்தில் குலசிங்கம் ஐயா அவர்களும் அவருடன்
இணைந்த பல ஆளுமையுள்ள அதிகாரிகளும்
பக்க பலமாக இருந்தார்கள். வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் பயின்ற மாணவர்கள் தனியார் துறைகளிலும் அரச துறைகளிலும் வேலைவாய்ப்பைத்
தேடிக்கொள்ள மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் சிவச்சந்திரதேவன்
அவர்கள் உழைத்திருக்கிறார்.
எனது வீட்டில்
நான் உட்பட எனது இரண்டு சகோதரிகளும்
சுருக்கெழுத்து தட்டச்சுப் பயின்றவர்கள். அவர்களில் எனது இளைய சகோதரி
கற்கை முடித்து வல்வை நகரசபை அலுவலகத்தில் பயிற்சியாளராகச்
சென்று பணியாற்றிய காலங்களில் அவர் தொடர்ந்து தனக்கு
ஒரு நிரந்தர அரச வேலையைப் பெற்றுக்
கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டது. இன்று கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றுகிறார். இப்படித்தான் இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்கு வடமராட்சி சுருக்கெ ழுத்துக் கழகம் பல்வேறு வகையில் உந்து சக்தியாகத் திகழ்ந்தது.
எனது
இலக்கிய ஆர்வத்தைச் சரியாக இனங்கண்டு தட்டிக் கொடுத்து கைதூக்கிவிட்டவர்களில் ஐயாவை நான் மறக்க முடியாது.
இலக்கியத்தின் மீதான எனது பிரியத்தை எப்படியோ
இனங்கண்டு கொண்டவர். நான் கற்ற காலத்திலும்
அதற்குப் பின்னரான காலங்களிலும் கழகத்துடனான
தொடர்பைப் பேணவும் நிகழ்வுகளில் பங்குபற்றவும் வாய்ப்பு ஏற்படுத்தியர். கவிதை வாசிக்கவும் கவியரங்கை நிகழ்த்தவும் அதிக வாய்ப்புக்களைத் தந்தவர்.
கவியரங்குகளில் நான் அதிகம் ஈடுபட்டதென்றால்
அது கழக விழாக்களில்தான். கடந்த
2015இல் நடைபெற்ற முத்துவிழாவில் கூட கவிஞர் த.
ஜெயசீலன், நண்பர் அ.பௌநந்தி, எழுத்தாளர்
க.சின்னராசன் ஆகியோருடன் இணைந்து கவிதை பாடும் வாய்ப்பைத் தந்திருந்தார்.
அவரின்
எழுத்து முயற்சிகள் மற்றுமொரு பக்கம். சுருக்கெழுத்து, தட்டச்சுத் தொடர்பான பல கட்டுரைகளையும் குறிப்புக்களையும்
எழுதியது மட்டுமல்லாது அவற்றை நூலாகவும் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
யுத்த
காலத்தில் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம், வடமராட்சி தவிர்ந்து மல்லாகம், இருபாலை, அச்சுவேலி மற்றும் கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய பிரதேசங்களிலும் இயங்கியது.
அப்பிரதேச இளைஞர் யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்புக்கு வழிகாட்டியிருக்கிறது. இவற்றுக்குப் பின்புலமாக இருந்தவர் சிவச்சந்திரதேவன் அவர்களே.
தொடர்புடையவர்களைச்
சந்திக்கும் பொழுதுகளில் எல்லாம் கழகத்தின் செயற்பாடுகள், காலத்துக்கு ஏற்றவாறு மாறவேண்டிய தேவைகள் பற்றியே உரையாடுவார். அதனாலேயே கணினிப்பயிற்சிக் கற்கைநெறியையும் இறுதிக்காலங்களில் முன்னெடுத்திருந்தார். கழகத்தில் பயின்ற மாணவர்களுக்குப் பல விதத்திலும் தொடர்ச்சியாக உதவிய பாடசாலைகளை இனங்கண்டு ஒன்பது இலட்சம் ரூபா கழக நிதியை
9 பாடசாலைகளுக்கு பாடசாலைகளில் நூலக வளர்ச்சிக்கெனக் கொடுத்து
உதவியிருக்கிறார். வேறு பல சமூக
நலனோம்புகை செயற்பாடுகளிலும் கழகத்தின் சார்பாக இயங்கியிருக்கிறார்.
இவ்வாறாக, தன்னையும் வளர்த்து தன்னைச் சார்ந்தவர்களையும் கூடவே அழைத்துக்கொண்டு தனிமனித முன்னேற்றத்தின் ஊடாக சமூக முன்னேற்றத்திற்கு
வழிகோலியவராக ஐயா சிவச்சந்திரதேவன் அவர்கள்
தன்னை இந்தச் சமூகத்தில் வெளிக்காட்டியிருக்கிறார். அன்னாரின் பணிகள் நினைக்கவேண்டியவை. இனிவரும் காலங்களிலும் பொருத்தமான வகையில் அவரின் சமூக சிந்தனையுடன்
கூடிய பணிகளை அவருடன் தொடர்புபட்ட நண்பர்களும் மாணவர்களும் முன்னெடுத்துச் செல்லவேண்டியதே எமக்குரிய கடமையாக இருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
கலாநிதி
சு. குணேஸ்வரன்
ஆசிரியர்,
தொண்டைமானாறு
வீ.ம.வித்தியாலயம்.
Comments
Post a Comment