அன்பின்
சகோதரரே!
2020.03.14ஆம் திகதி
மதிவதனி அக்காவின் கணவரின் துக்கம் விசாரிக்க வந்த என்னையும் என்
மனைவியையும் வரவேற்று, உபசரித்து வழியனுப்பிவைத்த உங்களுக்கு இவ்வளவு விரைவாக இரங்கல் மடல் எழுதுவேன் என்று
நான் சற்றும் எண்ணவில்லை.
உங்களின்
மரணச் செய்தியைக் கேட்டவுடன் குருநாகல் கதிரேசன் ஆலயத்தில் எனது மாமனார் அமரர்
திரு. சிவக்கொழுந்து அவர்கள் உங்களை அறிமுகப்படுத்திவைத்த நினைவுகள் சீண்டிச் சென்றன. நாங்கள் அறிமுகமாகி ஒரு தசாப்தகாலமாக இருந்தாலும்
நாம் சந்தித்த நாட்களோ குறைவாகவே இருந்தன. எனினும் எமது உறவு பல
வருடங்கள் இருந்ததாகவே நான் உணர்ந்தேன். நாம்
சந்தித்து உறவாடிய நாட்களில் இலங்கையின் தேசிய அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதன் வரலாறு தொடர்பாகவும்
நீங்கள் கூறிய விடயங்களை வைத்து உங்களின் கூர்மையான அரசியல் ஞானத்தை அறிந்து கொண்டேன்.
குருநாகல்
நகரில் வாழ்ந்த யாழ்ப்பாண வியாபாரிகளின் வரலாற்றையும் அவர்களுடனான உங்களின் தொடர்புகளைப் பற்றியும் என்னிடம் பேசியபோதெல்லாம் நீங்கள் பல துறைசார் அனுபவம்
கொண்டவர் என்பதை அறிந்துகொண்டேன்.
நீங்கள்
எனது மனைவி, மகன் பற்றி என்னுடன்
பேசிய போதெல்லாம் எனது மாமனார் இல்லாத
குறையை நான் ஒருபோதும் உணரவில்லை.
சகோதரரே‚
கொரோனா என்ற வைரஸ் உங்களின்
இறுதிக் கிரியையில் கலந்துகொள்ள முடியாது செய்தது. அதனை நினைத்து மிகவும்
வேதனையடைகின்றேன். உங்கள் இழப்பானது குடும்பத்திற்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். நீங்கள்
மறைந்தாலும் சிவச்சந்திரதேவன் என்ற உங்கள் நாமம்
வடமராட்சியில் நிலைத்திருக்கும் என்பது போல எம்மனதைவிட்டு நீங்காத
உங்கள் நினைவுகளும் என்றென்றும் எம்மனதில் உயிர்வாழும்.
இப்படிக்கு,
பாசமிகு
சகோதரனை இழந்தவனாக நான்
ஜே.கேதீஸ்வரன்
அதிபர்,
கு/சரஸ்வதி
தமிழ் வித்தியாலயம்,
குருநாகல்.
Comments
Post a Comment