Skip to main content

சிவச்சந்திரதேவனின் வாழ்க்கைச் சுவடு - சிதம்பரப்பிள்ளை சண்முகம்

முத்தும் மணியும் பொலிந்து விளங்கும் ஈழமணித் திருநாட்டின் வடபுலத்தில் அமைந்தது யாழ்ப்பாணம். இதன் வடமராட்சிப் பகுதியில் புலோலி, புற்றளை என்னும் அழகிய கிராமத்தில் உத்தம வேளாளர் குலத்தவர்களான காலஞ்சென்ற பண்டிதர் திரு. கந்தசாமி வயிரவிப் பிள்ளைக்கும் அவரது துணைவி திருமதி வயிரவிப்பிள்ளை அன்னம்மா அவர்களுக்கும் பாசமிகு மகனாக திரு. சிவச்சந்திரதேவன் பிறந்தார். சிறுவயதிலேயே புற்றளைப் பிள்ளையார் மீது அசையாத நம்பிக்கை வைத்து வாழ்ந்த பெருந்தகை. இளமையில் கல்வியை மிக ஆர்வமாகக் கற்று, இள வயதிலேயே மக்கள் வங்கியில் சுருக்கெழுத்தாளராக நியமனம் பெற்றார். இந்நாளில் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகமென ஒரு கழகத்தை 1985இல் ஆரம்பித்து, அதன் ஸ்தாபகராகச் செயற்பட்டார். அக்காலப்பகுதியில் மிகக் கஷ்டநிலையில் வாழ்ந்த பல இளைஞர் யுவதிகளை இனங்கண்டு அவர்களுக்கான பல உதவிகளையும் செய்து அவர்களை ஊக்குவித்து அரசசேவையில் நடைபெறும் போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றவைத்து தேர்ச்சிபெறச்செய்தார். அந்நாளில் இலங்கை அரசாங்கத்தின் எந்தத் திணைக்களத்திற்குச் சென்றாலும் அங்கு சுருக்கெழுத்தாளர்களாக, தட்டெழுத்தாளர்களாகப் பணிபுரிபவர்கள் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழக பயிற்சியாளர்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

இக்காலகட்டத்தில் உடுப்பிட்டியைச் சேர்ந்த பெரும் குடிமகனான காலஞ்சென்ற திரு. கதிரிப்பிள்ளை பாலசிங்கம், திருமதி பாலசிங்கம் கமலினி அவர்களின் பாசமிகு சிரேஷ்ட புத்தியான செல்வி கிருஷ்ண குமாரி (கழகப் பயிற்சியாளர், தற்போது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட முகாமைத்து உத்தியோகத்தர்) அவர்களை 1994.11.05ஆம் திகதி கரம்பிடித்து, இல்லறமே நல்லறமாக வாழ்ந்து வந்தார். இல்லறத்தின் பயனாக செல்வன் சஜிஷ்ணவன் (கொழும்பு, றோயல் கல்லூரி), சுஹநிதன் (பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி), செல்வி ஸைந்தவி (இராமநாதன் இந்துக் கல்லூரி, கொழும்பு), செல்வன் அபீஷ்டகன் (பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி) ஆகிய நான்கு செல்வப் புதல்வர்களின் தந்தையுமாவார்.

தோன்றின் புகழொடு தோன்றுக திலார்
தோன்றலில் தோன்றாமை நன்று

என்ற வள்ளவர் வாக்குக்கு அமைய வாழ்ந்தவர்.

அன்பு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் கதறியழ 23.05.2020இல் கொழும்பில் காலமான செய்தியறிந்து மிகவும் கவலையடைந்திருக்கும் எங்கள் மாவட்ட மக்கள் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவரது இறுதிச் சடங்கில் பங்குபற்ற முடியாமையானது மிகவும் கவலையேஎனினும் அதிகமான மக்கள் இறுதிக் கிரியையின் போது பங்குபற்றியமைதக்கார் தகவிலார்என்பது அவரவர் எச்சத்தால் காணப்பெறும் என்பதற்கிணங்கியமை கவனிக்கத்தக்கது.

மண்சார் உலகில் மாயவனார் செய்த குடமிந்த
எண் சாண் உடம்பதனில் புகந்த உயிர்விட்டுப்
போகையிலே யார் வருவார், பொன்னும் பொருளும் வராது
ஆகையினால் செய்வீர் அறம் - அதுவே துணை.

இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.

ஓம் சாந்திஓம் சாந்திஓம் சாந்தி


சிதம்பரப்பிள்ளை சண்முகம்
ஓய்வுநிலை கணக்காய்வு அத்தியட்சகர்,
அகில இலங்கைக்குமான சமாதான நீதவான்,
அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்,
விராச்சி, உடுப்பிட்டி.


Comments