Skip to main content

மண்ணில் நாம் உள்ள வரை மாமாவின் நினைவிருக்கும்! - ஹம்சப்பிரியா & ராகவி

பிடித்தவர்களிடமிருந்து வரும் முதல் காலை வணக்கம் அன்றைய நாளையே நல்லதாக்கும். ஆனால் எமக்கு அன்று வந்ததோ எவராலுமே ஏற்றுக்கொள்ள முடியாதவாறான துயரமான செய்தி. அச்செய்தியுடன் அன்றைய நாள் எமக்கு சோகமாகியது. அச் செய்தியை கேட்டு நாம் மச்சாளுடன் கதைக்கும் போதுஅப்பா... அப்பா...” எனும் அழுகுரல் கேட்டது. நாமும்மாமாமாமா…” என்று தான். அதை மீறி எங்களால் வேறொன்றும் கதைக்க முடிய வில்லை. இவ்வளவு விரைவாக மாமாவை இழப்போம் என்பதை எம்மால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

மாமா எங்கள் மீது மிகவும் பாசமானவர். எமது சிறுவயதில் அவர் எம்மோடு ஆங்கிலத்தில் கதைத்து விவாதிப்பதும், செல்லமாக வாய்ச்சண்டை இடுவதும் உண்டு. எங்களோடு கதைக்கும் போது தானும் ஒரு சிறுபிள்ளையாக மாறுவதால் நாம் அவருடன் நண்பனைப் போலவே பழகினோம். தன்மகளோடும் அவர் நண்பன் போலவே பழகினார். நாம் சிறுவயதில் பாடசாலை விடுமுறையில் உடுப்பிட்டிக்கு வரும்போது அவரது வீட்டுத் தலைவாசலில் முதலாவதாக அவரையே சந்திப்போம். நாம் பார்க்கும் போதெல்லாம் தலைவாசலின் திண்ணை யில் இருந்தபடி பத்திரிகை வாசித்துக் கொண்டே இருப்பார். எம்மைப் பார்த்தவுடனே ஒரு புன்சிரிப்புடன் எம்மை வரவேற்பார். இவ்வாறு அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தோசமாக விளையாடுவது எமக்கு சிறிதுகாலமே நீடித்தது. ஏனெனில் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் கொழும் பிற்குச் சென்று நிரந்தரமாக தங்கினார்கள். அப்போது நாம் நிரந்தர மாக உடுப்பிட்டிக்கு வந்தோம். ஆனால் எமது இரு குடும்பமும் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு நெடுங்காலம் நீடிக்காததை நினைத்து மிகவும் கவலை அடைகின்றோம். எனினும் அவர்கள் ஒவ்வொரு விடுமுறைக்கும் ஊருக்கு வருவார்கள். அப்போது நாம் அங்கே சென்று விளையாடுவதும் மாமாவோடு செல்லமாகக் கதைப்பதும் உண்டு. பின்னர் காலம் செல்லச் செல்ல அண்ணாக்களின் உயர் கல்வி காரணமாக அவர்களால் இங்கு வரமுடியவில்லை. எனினும் மாமா மட்டும் தனது சுருக்கெழுத்துக் கழகம் சம்பந்தமான வேலை களுக்காகவும், சொந்த வேலைகளுக்காகவும் அடிக்கடி வந்து செல்வார். வரும்போது ஒரு முறையேனும் எம்மைப்பார்க்காது சென்றதில்லை. அவர் எம்மைப் பார்க்கவரும்போது எமக்குப் பிடித்தமான உணவுப் பண்டங்களை வாங்கிவருவார். தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அவரால் இங்கு வரமுடியவில்லை. அதனால் நாம் அவரை நெடுங்காலம் சந்திக்காது இருந்தோம். எனினும் அவர் எம் பெற்றோருடன் உரையாடுவதுண்டு. மாமா இங்கு வரும்போது எமது பாட ஆசிரியர்கள் அனைவரையும் பற்றி வினாவுவார். அவர் அனைவருடனும் எளிதில் பழகுபவர் என்பதாலோ என்னவோ அவருக்கு பெரும்பாலும் எல்லா ஆசிரியர்களையும் தெரியும்.

மாமாவை இழந்த அந்தநேரத்தில் கடவுள் கூட எம்பக்கம் இல்லை. அவரை இறுதியாக ஒரு முறையேனும் எம்மால் நேரில் காணமுடிய வில்லை. எவ்வளவு அழுதாலும் சில வலிகள் மட்டும் குறைவடைவதே இல்லை. அதிலும் பிடித்த ஒருவரை இழப்பென்பது மிகவும் வலி நிறைந்தது. மாமாவை நாம் நினைக்கும் போதெல்லாம் நாம் சிறுவயதில் அவருடன் கதைத்தவையே எமக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. அவர் எம்மை விட்டுப்பிரிந்தாலும் அவர் நினைவுகள் எப்போதும் எம்கூடவே உள்ளன.

நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது

வாழ்ந்து முடிந்தபின் நம்மை யாரும் மறக்கக் கூடாது

அதுதான் உண்மையான வாழ்க்கையின் வெற்றி


என்றும்
நீங்கா நினைவுடன்
பாசமிகு மருமக்கள்
ஹம்சப்பிரியா, ராகவி


Comments