Skip to main content

மாமாவின் நினைவுகளில் - சமாஹிதன் & தர்ஜனீஹிதன்

அன்றைய நாள் உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் எமது குடும்பத்தின் கறுப்பு நாள். எமது குடும்பத்தின் மூத்தவரை, எமது குடும்பத்தின் வழிகாட்டியை நாம் இழந்த நாள். அன்று சனிக்கிழமை (23.05.2020) அதிகாலை அம்மா, அப்பா பரபரப்பாக வேலைக்குத் தயாரானார்கள். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு சஜி அண்ணா விடம் இருந்து. நான்தான் அழைப்பை எடுத்தேன். அழுகுரலுடன்,சமாஹி மாமாவிடம் கொடுஎன்று. நான் ஓடிச்சென்று கொடுத்தேன். எனக்குள் ஆயிரம் சிந்தனை! ஆனால் அவற்றுள் எதுவும் இல்லாத, சற்றும் எதிர்பாராத ஓர் அவலச்செய்தி காதில் எட்டியது. வாழ்வில் மறக்க முடியாத நாள்! அன்று அம்மா, அப்பாவின் திருமணநாளும்கூட. எமக்கு கை, கால் ஓடவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் திரும்ப முடியவில்லை. நாட்டுச் சூழ்நிலையில் அவரின் இறுதிக் கிரியையில் பங்கு கொண்டு எமது கடமைகளை ஆற்றும் பாக்கியம் கிடைக்கவில்லை என்பதே மிகவும் வருத்தம் தருகின்றது.

எமக்கு அவருடனான அனுபவங்களைச் சொல்லச் சொன்னால் கூறிக்கெண்டே போகலாம். சிறுவயதில் எமக்கும் அவருக்குமான தொடர்பு சற்றுக் குறைவாகவே இருந்தது. ஏனெனில் நாம் குடும்பமாக யாழ்ப்பாணம் சென்றுவிட்டோம். அவர்கள் கொழும்பு சென்று விட்டார்கள். நாட்டுச் சூழ்நிலை காரணமாக எமக்கிடையிலான தொடர்பு மிகவும் அரிதாகவே காணப்பட்டது. நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் நான் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பின்னர் நாம் அனைவரும் கொழும்பு சென்றோம். கொழும்பில் மாமா வீட்டிற்குச் சென்று கதவைத் திறந்த போது முதன் முதலில்வாங்கோ வாங்கோஎன்று அவரின் புன்முறுவல் சிரிப்போடு வரவேற்றார். அன்றைய நாள் முதலே எனக்கு அவருடைய ஞாபகங்கள் நினைவில் உள்ளது. நாம் கொழும்பு சென்றாலும்சரி அவர்கள் யாழ்ப்பாணம் வந்தாலும்சரி நானும் தம்பியும் எப்போதும் அவர்கள் வீட்டிலேதான். நாங்கள் அனைவரும் சேர்ந்து அங்கு செய்யாத அட்டகாசம் இல்லை. ஆனாலும் அவர் ஒரு நாளும் மனம் கோணுவ தில்லை. ஆரம்ப காலத்தில் கொழும்பு செல்லும்போதெல்லாம் வெளியில் செல்வதற்கு அதிகமாக அவரே எங்களைக் கூட்டிச் செல் வாH. செல்லும் வழிகளிலும் அது என்ன இடம், இது என்ன இடமென்று அனைத்தையும் காட்டுவார். நாம் சில விடயங்களில் பிழை விடும்போது எமது அடுத்த கட்டத்திற்கான முயற்சியில் கட்டாயம் அவரின் அறிவுரைகளும் இருக்கும். நாம் அவர் வீட்டிலிருந்த ஒரு நாள்கூட வேறு வீட்டில் இருப்பதாக உணர்ந்ததில்லை. எமது வீட்டில் அம்மா அப்பாவுடன் இருப்பது போலவே உணர்ந்திருந்தோம். அவர் தனது பிள்ளைகள் நால்வரையும் பார்ப்பதைப்போலவே எம்மையும் தன் பிள்ளைகள்போல் பார்த்தார். அங்கு நிற்கும்போது எம்மில் மிகுந்த அக்கறை காட்டுவார். என்னவென்றாலும் எம்மிடம் உரிமையோடு கூறுவார். அங்கு நிற்கும்போது எமக்கு அதிக வேளைகளில் அவரே தேநீர் ஊற்றித் தருவார். எந்த நேரமும் என்ன வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பார். கடைசியாக எமக்கு மாமா, மாமியின் 25ஆவது திருமணநாளில் அங்கு நிற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் உமா மாமியுடன் கதைக்கும்போதுகூடநான் 25 வருடங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து விட்டேன், அது போதும்எனக் கூறினார். இவ்வாறு அவர் நினைவுகளைக் கூறிக்கொண்டே செல்லலாம்.

அவர் தனது குடும்பத்திற்காகவும் சமூகத்திற்காகவும் தன்னையே அர்ப்பணித்தவர். இன்று அவர் இல்லாததால் குடும்பம் ஒரு வழிகாட்டியையும் சமூகம் ஒரு சிறந்த சேவையாளனையும் இழந்து நிற்கின்றது. எனினும், அவரின் நற்குணங்களுக்கான சான்றிதழில் அவரின் மரணமும் ஒன்றாகும். ஏனெனில், நல்லாரின் மரணமானது வெள்ளரிக்காய் போன்றது என நான் கேள்வியுற்றதுண்டு. அதாவது, வெள்ளரிக்கொடியானது நிலத்தில் படர்ந்து காணப்படும். வெள்ளரிக் காயும் நிலத்தில் ஊன்றியபடியே காய்க்கும். வெள்ளரிக்காய் முற்றிய வுடன் அக்காயையும் கொடியையும் இணைக்கும் காம்பானது மெது வாகக் கழன்றுவிடும். அக்காம்பு விட்டுவிட்டது என்பது வெள்ளரிக் காய்க்கும் தெரியாது, கொடிக்கும் தெரியாது. இதுபோலவே நல்லாரின் மரணமும் அமையும் எனப் பெரியோர்கள் கூறுவர். இவ்வாறே மாமாவின் பிரிவும் உள்ளது. நல்லவர்களை இறைவன் தன்னிடத்தே வேளைக்கே அழைத்து விடுகின்றான். அவர் உடல் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவரின் நினைவுகள் எப்போதும் எம்மை வியாபித்த வண்ணமே இருக்கும். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக


மாமாவின் நினைவுகளுடன்
பாசமிகு மருமக்கள்
கி.சமாஹிதன்
கி.தர்ஜனீஹிதன்

Comments