Skip to main content

அப்பா - தி. ஆரதி

நம்மை அறியாமல் நமக்குள் உருவாகும் ஒரு நிகரற்ற அன்பு அப்பாவின் அன்பு. அவர் நம்முடன் கூட இருக்கும் போது நிராகரிக்கப்படும். ஏன், பல நேரங்களில் கண்டு கொள்வதுமில்லை. ஆனால் அந்த அன்பு நிரந்தரமாகக் கிடைக்காதா? என ஏங்கும்போது அந்த அன்பினை வழங்குவதற்கு அவர் இவ்வுலகில் இருப்பதில்லை. நாங்கள் எல்லோரும் எமது இந்த வாழ்க்கைப் பயணத்தில் செய்கிற பொதுவான ஒரு விடயம் அம்மா மேல் நாம் வைத்திருக்கும் அன்பை அவர்களுக்கு நேரடியாக வெளிக்காட்டுவதைப் போல அப்பாக்களிடம் உள்ள அளவு கடந்த அன்பை நாங்கள் வெளிக்காட்ட தவறிவிடுவோம்.

என்னுடைய வாழ்க்கையில் என் அப்பாவைப்போல் எனக்கு இன்னோர் அப்பா எனும் ஸ்தானம் வழங்கியவர் சிவா அப்பா. என்னைச் சுற்றி இருக்கும் எத்தனையோ நண்பர்களின் நட்பையும் கடந்து அவர்களின் வீடு வரை சென்று பழகி இருந்தாலும்கூட எல்லாம் ஒரு எல்லை வரை தான். ஆனால் அந்த விடயத்தில் நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி. ஸைந்தவியை எனக்கு தரம் 6 இல் இருந்து பழக்கம். சாதாரண நண்பர்களாகத் தான் இருந்தோம். கால ஓட்டத்துக்குள் இணைய எனக்கும் அவளுக்குமிடையேயான நட்பின் ஆழம் அதிகரித்தது. தரம் 7 இல் பரீட்சை நெருங்கும் வேளையில் ஒன்றாக இணைந்து படிக்கலாம் என முடிவெடுக்க, அன்று தான் நான் சிவா அப்பாவை முதன்முறை சந்தித்தேன். முன்பின் பழக்கம் இல்லை, என்றாலும் கூட ஏதோ ரொம்ப நாள் பழகியது போல எங்களுடைய முதல் உரையாடல் ஆரம்பமானது. யாழ்ப்பாணத்தில் எங்க இருக்கிறீர்இ அப்பா என்ன வேலை, ஓஹ் அந்த பழைய Post office lane இருக்கும் அந்தக் கடையா? இப்படி நானும் சிவா அப்பாவும் கிட்டத்தட்ட 2 மணிநேரம் பேசியிருப்போம். அப்படியே நாட்கள் போகப் போக Wellawatte வீதியில், 155 பஸ்ஸில், school வாசலில் இப்படி காணும் இடம் எல்லாம் ஆஹ் ஆரதி எப்படி இருக்கிறீர்கள? என்று கேட்காமல் போனதில்லை. O/L Exams முடிந்த பிறகு, முதன்முறையாக நான் எனது அக்காவின் திருமண அழைப்பிதழ் கொடுக்க ஸைந்தவியின் வீட்டிற்குப் போனேன். எப்போதுமே வீட்டுக்கு விருந்தினராக யார் வந்தாலும் அவர்களின் வீட்டின் இயல்பு நிலையை காட்டாமல் வழமைக்கு மாறாக சுத்தமாக இருக்கும். இது வழமை தான். ஆனால் நான் முதல் முறை போன உணர்வு எனக்கு துளி கூட வரவில்லை. ஏனென்றால் சிவா அப்பா சொன்னார், நீர் ஒன்றும் வெளி ஆள் இல்லை. எங்கள் வீடு எப்பவும் இப்படித்தான் இருக்கும். அந்த வார்த்தையே நான் அந்த குடும்பத்தில் ஒருத்தி என என்னை மேலும் மேலும் உணர வைத்தது.

ஸைந்தவி சொய்சாபுரவில் இருந்து வெள்ளவத்தைக்கு மாறி சில மாதங்கள் போக நான் அவளைப் பாக்கலாம் என்று அவள் வீட்டுக்குப் போக வாசலில் காலை வைக்க ஒரு குரல், ஆரதி வாரும் வாரும்! வீட்டுக்கு போனது என்னமோ ஸைந்தவியைப் பார்க்கத்தான். ஆனால் அங்கே நானும் அப்பாவும் தான் பேசிக்கொண்டு இருந்தோம். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்க சிவா அப்பா kitchenக்கு உள்ளே போய் எனக்கு அளவான இனிப்புடன் சுவையான Tea ஆத்தித் தந்தார். Tea Cupஐக் கையில் தரும் போது இன்றைக்கு மட்டும் தான் நான் போட்டு தருவேன். இனி நீர் தான் போட்டுக் குடிக்கணும். Kitchenல tea set எல்லாம் இருக்கு. அது வெறும் பேச்சு மட்டும் இல்லை, நிஜம் தான். அதுக்கு பிறகு நான் எப்பொழுது அந்த வீட்டுக்குப் போனாலும் tea போட்டு குடிச்சு முடிய என் cupஐ மட்டும் இல்லை ஸைந்துட cupஐயும் எடுத்து கொண்டு போய் கழுவிப் பக்கதுல வச்சிட்டு மறுபடியும் கதையைத் தொடங்குவோம். நான் அந்த வீட்டுக்கு எப்போது போனாலும் சிவா அப்பா எனக்கு அவருடைய பழைய காலக் கதைகள், அவருக்கு நடந்த ஒரு motorbike accident அது paper வந்த articleனு எல்லாவற்றையும் சொல்லி, தான் அவ்வளவு பெரிய விபத்தில இருந்து உயிர் தப்பி இருக்கிறேன் என்று சொல்வார். இதை விட நான் commerce படிக்கிற காரணத்தால் எனக்கு budget book எல்லாம் எடுத்து தந்து படிக்க உதவும் வைத்திருங்கள் என்று தந்தவர். யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மா அனுப்பும் பால்கோவாவைக் கொண்டு வந்து கொடுத்தால் sugar இருக்கிறதையும் மறந்து நன்றாக சாப்பிடுவார்.

எனக்கும் சிவா அப்பாவிற்கும் பழகிய நாட்கள் குறைவு என்றாலும் அவர் எனக்கு தந்த அறிவுரைகள்இ பேசிய கதைகள் எல்லாம் என்றும் அழிவில்லாதவை. அப்பா இருக்கும் போது ஸைந்தவியை எப்போதும் என்னுடன் தனியாக அனுப்புவார். என் மேல் அப்பாக்கு அப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அப்போது மட்டும் இல்லை எப்போதும் நான் காப்பாற்றுவேன். எனக்குக் கிடைத்த ஓர் அழகான உறவு அது. சிவா அப்பா ஒரு கணவன், ஒரு அப்பா என்ற ஸ்தானத்தை தாண்டி, ஒரு சிறந்த மனிதர் என்பதை எனக்கு பல தடவைகள் உணர்த்தி உள்ளார். சிவா அப்பா இந்த உலகில் இல்லாமல் போனாலும்கூட எப்போதும் அவர் எனக்கும் அவருடைய ஆசீர்வாதங்களைத் தருவார் என்ற ஆழமான நம்பிக்கையுடன் நினைவுகளுடன் கூடிய இந்தப் பகிர்வை நான் நிறைவு செய்கிறேன்.


என்றென்றும் நட்புடன்

சிவா அப்பாவின் இன்னொரு மகள்

திஆரதி

Comments