நல்லாரைக்
காண்பதுவும் நன்றே
நல்லார்
சொற் கேட்பதுவும் நன்றே
நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே.
என்ற
அடிகளுக்குப் பொருத்தமான, நல்லவராக வாழ்ந்தவர்தான் ஓய்வுபெற்ற வங்கியாளரும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழக நிர்வாகியுமான சிவச்சந்திரதேவன்
அவர்கள்.
அவர்
அமரராகிவிட்டார் என்ற செய்தி கேட்டதும்
நான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன். இவர் உடுப்பிட்டி பழைய
விதானை வளவில் வாழ்ந்த என்னுடைய ஒன்றுவிட்ட அண்ணர் பாலசிங்கம் அவர்களின் மகளான கிருஷ்ணகுமாரியைத் திருமணம் செய்த நாள்முதல் அவரோடு பழகிவருகிறேன்.
இவர்
தனது ஓய்வுநேரத்தில் தனது வீட்டின் தலைவாசலில்
இருப்பார். என்னைக் கண்டவுடன் “செல்வண்ணை” என அன்பாக அழைப்பார்.
அவரின் அன்புக் கட்டளையால் நானும் கதைக்காமல் போவதில்லை. இவரின் புன்சிரிப்பை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. இவர் எப்போதும் பிள்ளைகளின்
கல்வி மேம்பாட் டைப் பற்றியும் ஊர்
முன்னேற்றத்தைப் பற்றியும் கதைப்பார். பிள்ளைகள் சுருக்கெழுத்து - தட்டெழுத்துக் கற்றால் கணினியைக் கற்பது இலேசாக இருக்குமென புத்திமதி கூறுவார்.
இவர்
வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தை நிர்வகித்து, சாதி, மதம் பாராது மாணவர்களை
ஊக்குவித்து, சுருக்கெழுத்து - தட்டெழுத்துப் பரீட்சைகளில் அவர்களைச் சித்தியடையவும் செய்துள்ளார். இவரின் அயராத உழைப்பால் நூற்றுக்கணக்கானோர் அரச, தனியார் அலுவலகங்களில்
செயலாளர்களாகவும் அதிகாரிகளாகவும் கடமை புரிகின்றார்கள். இதனால்
இவரின் பெயர் என்றும் அழியப்போவ தில்லை.
இவரின்
மாமனார் பரம்பரை பரம்பரையாக வணங்கிவந்த பண்டகைப் பிள்ளையாரில் இவர் அளவிலா பக்தி
கொண்டவர். பிள்ளையாரின் தேர்த் திருவிழா, ஆவணி மாத விநாயக
சதுர்த்தி, விநாயக சஷ்டி போன்ற முக்கிய உபயங்கள் இவரின் மாமனாருடையது. அதில் ஆவணி மாத விநாயக
சதுர்த்தி உற்சவத்தை இவரே சங்காபிஷேகத்துடன் மிகவும் சிறப்பாக
செய்து வருகிறார். அத்துடன் சித்திரைப் புதுவருடப்பிறப்பன்று கோயிலுக்கு வரும் அடியார்களுக்கு கைவிசேடம் வழங்கும் கைங்கரியத்தை இவரே ஆரம்பித்து வைத்ததுடன், அதனை வழங்கும் ஏற்பாடுகளையும் இவரே செய்துவருகின்றார்.
நான்
ஒருமுறை தென்மராட்சி செயலாளரைச் சந்தித்தபோது, உடுப்பிட்டியில் இருப்பதால் சிவச்சந்திரதேவனை தெரியுமா? எனக் கேட்டார். நான்
எனது உறவினர் என்று கூறியபோது, அவரை எனக்கு அறிமுகப்படுத்த
முடியுமா? எனக் கேட்டார். நானும்
அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். அதனால் தென்மராட்சிப் பிள்ளைகள் சுருக்கெழுத்துக் கற்று அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள். இவரைப்
பொறுத்தளவில் இவரின் சேவையை அளக்கமுடியாது.
“பிறப்பவர்
எல்லோரும் இறப்பது திண்ணம்” என்பதைத் தெரிந்திருந்தும், அறிந்திருந்தும் அவரின் இழப்பினை எவராலும் ஈடுசெய்ய முடியாது. அவருடைய ஆத்மா சாந்தியடைய பண்டகைப் பிள்ளையாரை இறைஞ்சுகின்றேன்.
ச.செல்வச்சந்திரன்
ஓய்வுநிலை
அதிபர்
மிருசுவில்
அ.த.க.பாடசாலை
Comments
Post a Comment