Skip to main content

கனா - அபீஷ்டகன்

வார்த்தைகளால் சொல்ல இயலாத சம்பவத்தைச் சொல்லி உணர வைக்க முயல்கிறேன். எங்கு தொடங்குவது, எதைச் சொல்வது என்று அறியாமல் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்குகிறேன்.

காலை ஆறு மணியளவில் அருண்டு எழுந்துவிட்டேன். மற்றைய நாளாக இருந்திருந்தால் மீண்டும் படுத்து உறங்கி இருப்பேன். அன்று நிகழ்நிலை வகுப்பு இருந்ததன் காரணமாக எழுந்து பல் துலக்கி முகம் கழுவி விட்டு மண்டபத்திலே கதிரைவேல் மடிக்கணினியை வைத்துவிட்டு சோபாவில் சாய்ந்தபடி நிலத்தில் அமர்ந்துகொண்டு வகுப்பிற்கு உட்பிரவேசிக்க வகுப்பு இலக்கத்தை யும் கடவுச்சொல்லையும் கொடுத்துவிட்டு ஆசிரியர் என்னை உட்பிரவேசிக்க அனுமதிக்கும் வரை காத்திருந்தேன்.

வழமையாக எனக்கு நிகழ்நிலை வகுப்புகள் இருக்கும் நாட்களில் அப்பாவே என்னை எழுப்புவது வழக்கம். அன்று நானே எழுந்து கொண்டேன். அவரும் அம்மாவும் நித்திரைகொண்டு கொண்டி ருந்தார்கள். அவர்கள் நித்திரை கொள்ளட்டும், குழப்ப வேண்டாம் என்று நினைத்து அவர்களைத் தொந்தரவு ஏதும் செய்யாமல் நான் ஆசிரியரின் அனுமதிக்காகக் காத்திருந்தேன்.

ஆசிரியர் என்னை அனுமதிக்கக் காலந்தாழ்த்திக் கொண்டி ருந்தமையால் நண்பர்களிடம் சொல்லி ஆசிரியரிடம் என்னை அனுதிக்கச் சொல்லுமாறு சொல்லிவிட்டு எனது காத்திருப்புத் தொடர்ந்தது. சுமார் அரைமணி நேரக் காத்திருப்பின் பின்னர் வகுப்பினுள் அனுமதிக்கப்பட்டேன். வகுப்பினுள் அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரம் கடந்த நிலையில் வகுப்பு முடியும் தருவாயை எட்டி இருந்தது. அப்போது அம்மா எழுந்து தேநீருக்காக தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு அப்பாவை எழுப்பினார்.

அன்று அப்பா இரத்தப்பரிசோதனை செய்யப் போகவேண்டும் என்று சொல்லி இருந்ததனால் அவர் அயர்ந்து தூங்குவதாக அம்மா நினைத்தார். வழமையாக அப்பாவே முதலில் எழும்புவார், அன்று அம்மா முதலில் எழுந்ததால் அவர் எழுந்தவுடன்,இன்டைக்கு நான் முன்னம் எழும்பீட்டன்என்று அப்பாவிடம் சொல்லியபடி எழும்பினார்.

அப்பா இரத்தம் குடுக்க போகோனும் எண்டனீங்க, எழும்புங் கோவன்என்று சொன்னபடி அம்மா அப்பாவை எழுப்பினார். அப்பா எழவில்லை. “அப்பா..! அப்பா..!” என்று மீண்டும் மீண்டும் சொல்லி எழுப்பினார். ஆனால் அவரோ அசைவே இல்லாமல் படுத்திருந்தார். நிகழ்நிலை வகுப்பு நிறைவுற்று ஓரிரு நிமிடங்கள் இருக்கும். அம்மாவின் சத்தத்தை கேட்டு அம்மா அருகே சென்றேன். “அபீ..! அப்பா‚!” என்ற அம்மாவின் அலறல்எனக்கு என்ன நடந்தது என்பது உடனடியாகப் புரியவில்லை. “அப்பா‚.! அப்பா..!” என்று அப்பாவை எழுப்பினேன். அவரோ எழவில்லை. மூளைக்கு அப்பா இல்லை என்று புரிந்திருந்தது, மனமோ அதை ஏற்க மறுத்தது. என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துப் போய்விட்டேன். அப்பாவைப் பார்த்தபடி இருந்துவிட்டேன். அம்மா, அக்கா, அண்ணாமார் அழுது கொண்டிருந்தனர். என்னால் அதை ஏற்க முடியவில்லை. கனவு கண்டு கொண்டிருந்தேன். இப்போது என்னை நிகழ்நிலை வகுப்புகளுக்காக அப்பா என்னை எழுப்ப மாட்டாரா? என்ற சிந்தனை அந்த நேரம்.

எங்கள் வீட்டில் எழுந்த அலறல்கள், அழுகுரல்களைக் கேட்ட அயல்வீட்டார் எங்கள் வீட்டு நிலைமையைப் பார்த்து எமது தொடர்மாடியில் குடியிருந்த வைத்தியரை அழைத்து வந்தார். வைத்தியர் எங்கள் வீட்டில் வந்து அப்பாவின் நாடியைப் பிடித்துப் பார்த்து நாடித்துடிப்பு இருக்கிறது என்றார். அப்பொழுது நான் தான் தவறாக புரிந்துவிட்டேன், அப்பா மயங்கி இருக்கிறார், அவருக்கு எதுவும் இல்லை என்று மனது சொன்னது. வைத்தியர் அப்பாவின் சீனி அளவைப் பரிசோதித்து விட்டு சீனி அளவு மிகவும் குறைவாக இருப்பதாகவும் சொன்னார்.

ஐந்து நிமிடம் கூட எனக்கு அந்த ஆறுதல் நிலைக்கவில்லை. நாடித்துடிப்பு இருப்பதாகச் சொன்ன வைத்தியரே நாடித்துடிப்பு இல்லை என்கிறார். வீட்டில் பரபரப்புக்கள் நீடித்தது. சுஹன் அண்ணா வாணிச் சித்திக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து இந்த விஷயத்தைச் சொன்னதன் காரணமாக வாணிச் சித்தியும், வதனிச் சித்தியும் மகன்களும் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் வந்து சேர்ந்தனர் அண்ணாவின் நண்பர்கள், அக்காவின் நண்பிகள் என வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். நானோ யாரிடமும் பேசவில்லை. ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகியும் எனது மனம் அந்தச் சம்ப வத்தை ஏற்க மறுத்தது. வீட்டிற்கு வந்தவர்கள் ஆறுதல்கள் சொன் னார்கள். பெரிதாக ஒன்றுமே எனது காதுக்குள் புகக் கூடவில்லை.

வைத்தியர் நாம் திடீரென்று பயந்து விடக் கூடாதென்பதுக்காகவே முதலில் நாடித்துடிப்பு இருப்பதாகச் சொன்னார் என்பது எனக்குப் பின்னராகவே புரிந்தது. ஆனால் அந்த சில நிமிட ஆறுதலால் மனம் மீண்டும் மீண்டும் அப்படியே நடந்திருந்திருக்க கூடாதா என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

எங்கு முடிப்பதென்பது தெரியவில்லை. என்றுமில்லாத சில சம்பவங்கள் அன்று ஏன் நடந்ததென்பது தெரியவில்லை எனக்கு. அன்று தானாகவே நான் எழுந்தது ஏன்? நான் ஏன் அப்பா, அம்மாவை தேநீர் கேட்டு எழுப்பவில்லை? எப்போதும் ஐந்து, ஆறு மணிக்கு எழுந்திடும் அப்பா ஏன் எட்டு மணியாகியும் அன்று எழவில்லை? இப்படி எண்ணிலடங்கா கேள்விகள்இந்தக் கேள்விகள் அன்று ஏன் எனக்கு எழவில்லை? ஒருவேளை அன்று தேநீர் கேட்டு அப்பாவை எழுப்பி இருந்தால் அப்பா எழுந்திருப் பாரோ? என்று இப்போது மனது கேட்டுக் கொண்டிருக்கிறது.

வரிகள் போதாது அந்தக் காட்சியை விபரிக்க. என் உணர்வை விபரிக்க கிடைத்த வார்த்தைகள் கொண்டு ஏதோ ஒருவாறு கூறிவிட்டேன். நடந்த சம்பவம் அனைத்தும் கூற முடியவில்லை. எனினும் பெரும் பகுதியைக் குறிப்பிட்டேன் என்று நம்புகிறேன். இப்பொழுது கூட அப்பா இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. “அப்பா என்னை நித்திரையிலிருந்து எழுப்ப மாட்டாரோஎன்ற ஏக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது

அபீஷ்டகன்


Comments