Skip to main content

என்றும் நீங்காத நினைவுகள் - மனோறஞ்சினி கிருஷ்ணகுமார்

கடந்தகால நினைவுகளை மீட்க வேண்டிய சந்தர்ப்பத்தை உருவாக்கி விட்ட அண்ணாவேஎதை நான் சொல்வேன்? உங்களுடனான எனது உறவுமுறை அண்ணா-தங்கை, எனினும்அத்தான்என்றே எப்போதும் கூப்பிடுவேன். 2000ஆம் ஆண்டு முதன்முதலில் உங்களைச் சந்தித்தேன். அக்காலம் தொடக்கம் தொடர்புகள் இருந்தாலும் 2008ஆம் ஆண்டு உடுப்பிட்டிக்கு வந்த பின்னரே தொடர்புகள் அதிகரித்தன. நாங்கள் உடுப்பிட்டிக்கு வந்த காலத்தில் அவர் குடும்பத்தோடு கொழும்புக்கு சென்றுவிட்டாலும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை உடுப்பிட்டிக்கு ஓடிவருவார். சுருக்கெழுத்துக்கழக வேலை, மரணவீடு, திருமணவீடு என ஏதோ ஒரு காரணத்துடன் வருவார்.

உடுப்பிட்டிக்கு வந்து எமது வீட்டிற்கு வரும்போது பிள்ளை களுக்கு தின்பண்டங்கள் கொண்டு வருவார். கொழும்பிலிருந்து வரும்போது பேருந்து, புகையிரதத்தில் தனக்குப் பக்கத்தில் இருந்த வரைப்பற்றிச் சொல்லுவார். அதேபோன்று ஒவ்வொரு முறையும் வரும்போது யாரோ ஒருவருடன் சிநேகிதம் கொண்டுதான் வருவார். பின்னர் அவரைப்பற்றி எங்களிடம் வினாவுவார். அதேபோன்று பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பற்றியும் விசாரிப்பார். எவருடனும் துணிச்சலுடன் கதைத்து அன்பாகப் பழகுவார்.

நான் முதன் முதலில் கொழும்புக்குச் சென்ற நாள் எதிர்பாராத நாள் ஒன்றாகும். அதாவது அன்று அவரின் பிறந்தநாள். அவர் எங்களை அன்பாக வரவேற்று உபசரித்தார். அன்று அவர் எல்லோருக்கும் இரவு உணவாக பீட்சா வாங்கித்தந்தார். அனைவரும் சந்தோஷமாக உண்டு மகிழ்ந்தோம். அவரின் இப்பிறந்தநாள் நாம் ஒவ்வொரு முறையும் கொழும்பு செல்லும்போது எமது நினைவுக்கு வரும்.

நான் இறுதியாக கொழும்புக்கு அவரின் தம்பியின் (மைத்துனியின் கணவர்) மரண வீட்டிற்குச் சென்றபோது தான் இறுதியாகக் கண்டேன். மரணவீடு முடிந்து யாழ்ப்பாணம் வரப் பேருந்தில் ஏறும் போதும் இரவு உணவு தந்து வழியனுப்பி வைத்தார். அந்த நாட்கள் என்றும் மறக்கமுடியாத நாட்கள் ஆகிவிட்டன. அதேபோன்று அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் என்னுடன் தொலைபேசியில் கதைத்தார். அந்த நாள்தான் அவர் என்னுடன் கதைத்த இறுதி நாள் ஆகிவிட்டது.

அத்தானின் நினைவுகள் வரும்போது இப்போதும் கண்களில் கண்ணீர் சொரிகின்றன. அவரின் இறுதிச் சடங்கினைக் கூடப் பார்க்க முடியாத காரணத்தால் எப்போது நினைத்தாலும் அவர் உயிரோடு இருப்பது போலவே தோன்றுகின்றது. ஆனால் அவர் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரின் நினைவுகளை என்றும் மறக்கமுடியாது. அவரின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல பண்டகைப் பிள்ளையாரைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

மனோறஞ்சினி கிருஷ்ணகுமார்


Comments