Skip to main content

விடியப்போகிறது - சஜி

எனக்கும் அப்பாவுக்குமான உரையாடல்கள் மிகச்சுருக்கமானவை. உடுப்பிட்டியில் இருந்து கொழும்பு வந்து விட்ட பின்னர் அங்கே தினமும் வெளியில் சென்று எப்போதுமே ஏதாவது வேலையாக இருக்கும். அப்பா அதிகம் வீட்டிலிருக்க ஆரம்பித்து விட்டார். அங்கே வீடு, பள்ளி, டியு+சன் என்று இருந்த நான் அதிகம். வீட்டுக்கு வெளியே என் நேரத்தைச் செலவளிக்குமாறு ஆகிற்று.

அப்பாவோடு அதிகம் நேரம் செலவிடவோ, உட்கார்ந்து ஊர்க் கதைகள் பேசவோ பெரிதாய் சந்தர்ப்பங்கள் அமைந்ததில்லை. இந்த ஊரடங்கின் தாக்கமே இரண்டு மாதங்கள் அவரோடேயே இருக்க வைத்தது. இல்லாவிட்டால் நிச்சயமாய் நானோ, அவரோ அவ்வளவு பேசியிருக்க வாய்ப்பேயில்லை.

இரண்டாயிரத்தின் ஆரம்ப காலகட்டம்

அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள். திங்கள் முதல் வெள்ளிவரை காலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவார். என் பள்ளியின் ஆரம்பகால கதையெல்லாம் இரவு நேர விறாந்தைச் சம்பாஷணைகளாகவும் சனி, ஞாயிறுகளில் அவர் முற்றம் கூட்டும் அதிகாலைப்பொழுதில் பல் துலக்க பற்பொடியைக் கையில் வைத்துச் சொல்லும் பற்பொடிச் சம்பாஷணைகளாகவுமே மாறியிருந்தன.

பாலர் பாடசாலையில் பேச்சுப்போட்டிக்காய் பாடமாக்கியவுh Pயசசழவ ளுவழசலமுதன் முதலில் அவருக்கு சொல்லிக்காட்டிய பாவத்திற்கு அடுத்த ஓரிரு வருடங்களில் அவரிடம் வந்த அத்தனை விருந்தினர்க ளுக்கும் நான் பேசிக்காட்டியே ஆக வேண்டும் என்ற எழுதப்படாத யாப்புக்கு கட்டுப்பட்டவனானேன்.

தினமும் வேலை முடிந்து வந்தவுடன் கோவிலடிக்கு தண்ணீர் அள்ளப்போவது வழக்கம். அப்பாவுடன் செல்லும் மோட்டார் சைக்கிள் பயணங்கள் எப்போதுமே பொக்கிஷங்கள். வாழ்வின் எல்லா மூலை களைப் பற்றியும் ஏதேனும் பேசிக்கொண்டே சென்றிருப்போம். எங்கு யாரைக் கண்டாலும் என்னை அவர்களுக்கும் அறிமுகம் செய்து வைப்பார்.

அப்போது எனக்கு 5 வயதிருக்கும். அப்பாவின் சுருக்கெழுத்துக் கழக உறுப்பினர்களும் மாணவர்களும் நாங்களும் சேர்ந்து முழு இலங்கைக்கான சுற்றுலா சென்றிருந்தோம். இன்றுவரை என் முகத்தில் பார்த்தவுடன் புன்னகை ததும்பும் புகைப்படங்கள் அவையாகத்தான் இருக்க முடியும். அவருடைய மாணவர்கள் எல்லோரையுமே எங்கள் உறவுகள் போல் மாற்றியதில் அந்த சுற்றுலாவுக்கு பெரும் பங்குண்டு.

வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் எல்லா நிகழ்வுகளிற்கும் அநேகமாக அப்பா என்னையும் அழைத்துச் செல்வதுண்டு. ஆனால் இன்று வரை சுருக்கெழுத்தில் ஒரு வசனம்கூட எனக்கு எழுதத் தெரியாது என்பது இவ்வளவு நாள் இல்லாதவாறு இப்போது வலியாய் மாறிப்போய் மனதிற்குள் இருக்கிறது.

சிறுவயது முதலே பிறந்தநாள் கொண்டாட்டங்களை விமரிசையாக செய்து பழக்கமில்லாத காரணத்தாலோ என்னவோ அவரின் பிறந்த நாளுக்கு கூட நான் அவ்வளவு சிரத்தை எடுத்து ஏதும் செய்ததில்லை. என் சந்தோஷங்களில் அவர் தன்னைத்தானே சந்தோஷப்படுத்திக் கொண்டதைத்தாண்டி அவருக்கென்று ஏதும் செய்ததில்லை.

அவர் ஒரு சமூகத்தின் முன்னோடியாய் இருந்து தனக்குப் பின்னான தலைமுறைக்கு தன்னாலியன்றதையெல்லாம் செய்து கொண்டிருந்த வேளை அவரின் உடல்நலமும் அதற்கான மருத்துவ தேவைகளும் எங்களை கொழும்பை நோக்கி அழைத்து வந்தது. உடுப்பிட்டியில் சொந்தங்களும் நண்பர்களும் சூழ வாழ்ந்தபின் அறிமுகமில்லாத ஊரில் வாழ்க்கையை தொடர்வது அத்தனை இலகுவில்லையே

2007 டிசம்பரில் சொய்சாபுரவில் அப்பாவுடனான இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமாயிற்று. முற்றிலுமாய் தன்னை மாற்றிக் கொண்டார். அம்மா வேலைக்கு செல்லத் தயாராகும் போது சாப்பாடு கட்டிக்கொடுத்து பஸ்ஸஷுக்கு தனியாக சில்லறை எடுத்து வைத்து கைச்செலவுக்கு தனியாக காசு வைத்து கண்ணாடி எடுத்து வைத்து ஒரு பிள்ளையை பார்ப்பது போல் அம்மாவுக்கு எல்லாம் செய்து கொடுப்பார். அப்பாவைப்போலொரு காதலனாய் இருந்துவிட வேண்டும் என்றும் கடவுளை வேண்டும் அளவுக்கு பார்த்துக்கொள்வார்.

ஆனால் சின்ன வயதில் அப்பாவிடம் இருந்து விலகியிருந்த நாட்கள் அப்பாவின் மீதான மரியாதையை அதிகம் வளர்த்தது போல நெருக்கத்தை அவ்வளவாகக் கொடுக்கவில்லை. அந்த தூரம் இங்கே தான் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது.

7ம் ஆண்டில் நான் முதல் முதலில் ஒரு பாடசாலைகளுக்கிடை யிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க முரளி சேரிடம் கேட்டு தயார்படுத்திய பேச்சை அப்பாவுக்கு பேசிக்காட்டுவேன். என் குறைகளை சுட்டிக் காட்ட மறந்தவராய் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.

நல்லா தானே பேசுற. கட்டாயம் பரிசு கிடைக்கும்என்று அனுப்பி வைத்தார். அவரின் வாய்முகூர்த்தம் முதல் போட்டியிலேயே முதல் பரிசு கிடைத்தது. ஆனால் சான்றிதழில் பெயரை தவறாக எழுதி விட்டார்கள். அந்த பெயரை மாற்ற தன்னிடம் படித்த ஒரு மாணவி அங்கு ஆசிரியையாய் இருப்பதை அறிந்து அவரிடம் பேசி கிட்டத்தட்ட 3 மாதங்களின் பின் அதை மாற்றிக்கொண்டு வந்து தந்தார். அன்றிலிருந்து இன்று வரை நான் வென்ற, பெயரெடுத்த அத்தனை விஷயங்களையும் எனக்கே தெரியாமல் ஆவணப்படுத்தியி ருக்கிறார்.

என்னை எனக்கே தெரியாமல் அதிகம் ரசித்தவர் அவர். எங்கே பேசினாலும் எங்கே எழுதினாலும் அதை நிச்சயம் அவர் பார்த்திருப்பார். என் தம்பி, தங்கையைப் போல என் நண்பர்களை நான் அவருக்கு அதிகம் அறிமுகப்படுத்தியதில்லை. எப்போது நான் வெளியே போனாலும் இரவு 9 மணிக்கு அவரின் அழைப்பு கட்டாயமாக வரும்.

எங்க நிக்கிற?”

வாறன் வையுங்கோமுதல் அழைப்பு.

இன்னும் வெளிக்கிடெலயா?”

இரத்மலானை/கல்கிசையில வாறன். வந்திடுவன்இரண்டாவது.

எங்க இன்னும் காணேல?”

கீழ வந்திட்டன்மூன்றாவது.

இது தான் என் பள்ளிக்கால இரவுகளில் அநேகமான கதை. சீரான இடைவெளியில் அவரின் அழைப்புக்களும் கொஞ்சமும் மாறாத என் பதில்களும் தொடர்ந்து சென்றன. எல்லாமே நம்பிக்கை என்ற ஒன்றில் தான் ஊறிப்போயிருந்தது. அப்பாவின் அந்த நம்பிக்கை என்றுமே என்னை அவரின் கட்டுப்பாட்டில் வைத்தி ருக்கும் வல்லமை படைத்தது.

எங்கள் வீட்டில் அதிகமாக வரும் சண்டைகளுக்கு காரணமும் அந்த நம்பிக்கைதான் என்றால் கூட மிகையில்லை. ஏதோ ஒரு காரணத்தால் என் வீட்டில் ஆரம்பம் முதலே எனக்கு கொஞ்சம் சுதந்திரம் அதிகம். நான் கேட்ட எதற்குமே அப்பா மறுப்புச் சொல்வதில்லை. நான் வீட்டுக்குத் தாமதமாக வருவதிலிருந்து எனக்கு பிடித்த சாப்பாடு செய்வதுவரை அப்பாவுக்கு எதிராகத்தான் வீட்டில் மனுத்தாக்கல்கள் செய்யப்படும். ஆனால் என் உதவி இல்லாமலே அவர் அதை எனக்கு வென்று கொடுப்பதுண்டு.

என் உயர்தரப் பரீட்சை எங்கள் வீட்டில் அடிக்கடி பேசு பொருளாவதுண்டு. ஆனால் எப்போதெல்லாம் அந்த பேச்சு எடுபடுகிறதோ அப்போதெல்லாம் என் மீதான மொத்த நம்பிக்கையையும் காட்டி என் பக்கம் நிற்பார். அம்மாவை எதிர்த்து பேசும் தைரியத்தில் கால்பங்கு கூட அப்பாவிடம் எனக்கு வருவ தில்லை. ஏதோ ஒரு வகையில் அப்பாவின் அந்த நம்பிக்கை தான் இன்றுவரை என்னை அதிகம் பொறுப்புமிக்கவனாய் மாற்றியிருக்கிறது.

அதே நம்பிக்கை எங்களுக்கு அப்பா இருக்கிறார். எதுவாய் இருந்தாலும் அவரிடமே சொல்லித் தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கை எப்போதும் இருப்பதுண்டு. பாடசாலைக்கு போகாமல் நாங்கள் பொய் சொல்லி வீட்டில் நின்றுவிட்டு மறுநாள் போகும் போது எந்தக் கேள்வியும் இல்லாமல் கடிதம் எழுதி தந்த போதெல்லாம் அது அவ்வளவு பெரிய விடயமாகத் தெரியவில்லை. ஆனால் எந்தத் தண்டனையும் இல்லாமலே எங்களை நல்வழி செய்யும் வித்தையை அவர் நன்கறிந்து தேர்ந்தவர்.

அப்பா எங்களுக்கு தன் பலம், பலவீனம் எல்லாவற்றையும் மிகத்தௌpவாகப் புரிய வைத்திருக்கிறார். தன்னால் முடியாததை முடியும் என்று எப்போதும் ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றிய தில்லை. அந்த புரிதலே அவர் மீதான அதீத மரியாதைக்கு காரண மும் கூட. ஆனால் அவர் சந்தோஷப்படுமாறு ஏதும் செய்யவில்லை என்பது ஒரு பெரும் குறையாகவே என் மனதில் இருந்து வந்தது. நான் ஏதாவது ஓர் இடத்தில் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. எங்கே என்ன வேலை வாய்ப்பு வந்தாலும் நூலகத்தில் செய்தித்தாளில் பார்ப்பதை அப்படியே குறித்துக் கொண்டு வந்து எனக்குச் சொல்லுவார். ஆனால் அநேகமாக அனைத்தையும் தட்டிக்களிப்பதை மட்டுமே நான் வேலையாகச் செய்துவந்தேன். ஒவ்வொரு முறையும் அவருக்கு அது பலத்த ஏமாற்றமாக இருந்தாலும் என்றுமே தன்னுடைய ஆசைகளை எனக்குள் திணித்ததில்லை. குடும்ப சுமைகளைத் தன்னிலிருந்து கொஞ்சம் நான் எடுத்துக்கொள்ள மாட்டேனா என்ற ஏக்கம் அவரிடம் எப்போதும் இருப்பதை நான் அறிவேன்.

அப்போது 2015ம் ஆண்டு. எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் முதல் முதலாக அப்பாவை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயமாயிற்று. வைத்தியர்கள் அவருக்கு நியு+மோனியா இருப்பதாகவும் மூன்று நாட்கள் களுபோவில வைத்தியசாலையில் இருக்க வேண்டும் என்றும் கட்டாயமாகச் சொல்லிவிட்டார்கள். யாராவது ஒருவர்தான் அப்பாவுடன் நிற்கமுடியும் என்பதால் அந்தப் பொறுப்பை நான் எடுக்க வேண்டியதாயிற்று. உண்மையைச் சொல்லப் போனால் அந்த இரண்டு இரவுகள் தான் என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான இரவுகள். அப்பாவுக்கு ஏதும் ஆனால் எப்படி இருக்கும் என்பதை அந்த இரவுகள் எனக்கு உணர்த்தியிருந்தன. அன்பு கொண்டவர்களை நிரந்தரமாக பிரிவதைக் காட்டிலும் அந்த வலியை கண்ணால் பார்ப்பது கொடிது.

சொய்சாபுரவில் இருந்து வெள்ளவத்தைக்கு மாறி வந்ததன் பின்னராக எங்கள் வாழ்க்கைக்கோலமும் கொஞ்சம் மாறிற்று. அநேகமாக வெளியிலே சுற்றித் திரியும் நான் இங்கு வந்த பின்னர் அநேகமாக வீட்டிலே தான் இருந்தேன். அவ்வப்போது அப்பாவும் நானும் ஏதும் பேசிக்கொள்வோம். எனக்கென்று ஒரு பாதை அமைந்து விட்ட திருப்தியை என்னால் அவரிடம் பார்க்க முடிந்தது. எப்போதெல்லாம் அவர் சந்தோஷத்தின் மிகுதியில் இருப்பாரோ அப்போது சுஹன் எழுதிய கதைகளையோ நான் வாசித்த செய்தி களையோ கேட்டு வாங்கி வாசிப்பதோ, கேட்பதோ அநேகம் நடக்கும்.

கொரோனாவால் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிப்போன காரணத்தால் அதிகம் கவலைப்பட்டவர்களுள் நானும் ஒருவன். ஆனால் இந்த இரண்டு மாதங்கள் அப்பாவை அதிகம் சந்தோஷமாய் வைத்திருக்க கிடைத்த வாய்ப்பென்று இப்போதெல்லாம் தோன்றுகிறது. சாதரணமாக எதுஎதுக்கோ எல்லாம் சண்டை போடும் நாங்கள் நால்வரும் இந்த காலத்தில் பெரிதாய் மனஸ்தாபப்பட்டதில்லை. அம்மாவை ஊட்டவைத்து உண்பது, ஸைந்தியின் மடியில் படுத்துத் தூங்குவது, சுஹனின் கதைகளைப் பற்றிப் பேசுவது, அபியோடு அறிவியல் கதைகள் பேசுவது இவையெல்லாவற்றையும் அப்பாவுக்குச் சொல்லி மகிழ்வது என்று சந்தோஷமாய் இருந்தோம்.

சுஹனும் அபியும் இந்த நாட்களை அதிகம் வினைத்திறனாய் பயன்படுத்த என் நாட்கள் மலையாள, ஆங்கில சினிமாக்களுடனேயே தான் ஆரம்பமாகியது. நிறைய நாட்கள் மனதுக்குள் இருந்த எழுத்து ஆசை துளிர்விடவே நானும் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 3 வாரமாய் எழுதிய கதையின் கடைசியை நெருங்கும் தருவாயை 22ம் திகதி அதிகாலை மொட்டைமாடியில் இருந்து எழுதிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் எழுதுவதும் கொஞ்சம் பாட்டுக் கேட்பதுமாய் விடிந்துவிட அப்பா படியாலே ஏறி வந்தார்.

நீ இன்னும் படுக்கெல்லாயாடா?”

இல்லை. முடிச்சுட்டு படுப்பம் எண்டு பாத்தன்

தேத்தண்ணி ஆத்துறன். கீழ வா.”

சரி வாறன். போங்கோ

இப்போதும் விடியப்போகிறது. அப்பா வந்து அழைத்துவிட மாட்டாரா? தினமும் இரவுகளில் வரும் அந்த தொலைபேசி அழைப்புக்கள் இனி வந்துவிடக் கூடாதா? விடியப்போகிறது. அப்பா எழும்பி வர மாட்டாரா?

கேள்விகள் தொடர்கிறன. விடையாய் அவர் வேண்டும்.

சஜி

Comments