Skip to main content

தன்னலமற்ற சேவையாளனே தேவன் - வெண்ணிலா கேதீஸ்வரன்

வடமராட்சி மண்ணிலே தனக்கென ஒரு தனிப்பெயரினை உருவாக்கி;  அம்மண்ணின் மாணவர்கள் பலரிற்கு தொழிற்கல்வியினைக் கற்பித்த பெருமை வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தையே சாரும். அதற்கு வித்திட்ட வித்தகனாகவும், தற்பெருமையற்ற தன்னார்வத் தொண்டனாகவும் விளங்கிய திரு.க.வ.சிவச்சந்திரதேவன் சேர் அவர்களையே சாரும்.   அந்த வகையில் 1987 காலப்பகுதியில் அதனை உருவாக்கி உடுப்பிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள இளையோருக்கு தட்டச்சின் தந்திரத்தையும், சுருக்கெழுத்தின் நுட்ப வரலாற்றையும் சொல்லிக்கொடுத்து அதன் மூலம் பல நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்து தற்போது வரையும் பணியாற்றிக் கொண்டிருக்கும் உன்னத நிலைக்கு வித்திட்ட வித்தகராக சிவச்சந்திரன் சேர் அவர்களைக் குறிப்பிடலாம்.  அந்த வகையில் தங்களால் வளர்க்கப்பட்டு, ஆளாக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர் என்பதில் பெருமையடைகின்றேன்.  இன்று அத் தட்டச்சின் வேகத்தையும், சுருக்கெழுத்தின் நன்மையையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

பாடசாலைகளிலும் சரி, ஏனைய நிறுவனங்களிலும் சரி மற்றவர்களை விஞ்சும் அளவிற்கு எமது தேவையை மிகக் குறுகிய நேரத்தில் பூர்த்தி செய்யக்கூடியதாகவும், அத்துடன் விசைப்பலகையில் கையை வைக்கும் போதும், தட்டச்சுச் செய்யும் போதும் ஏனையவர்களை ஆச்சரியமூட்டி ஒருகணம் திகைத்துப் பார்க்கும் நிலைக்கு இருப்பதற்கு சிவச்சந்திரன் சேரிடம் பயின்ற கலையே  காரணமாக அமைகின்றது.

கிட்டத்தட்ட எனது ஆரம்ப நியமனத்திலிருந்து இருபத்தொரு வருட சேவையின் இன்று வரைக்கும் இவரின் ஆரம்ப தொழில்நுட்ப தட்டச்சு சுருக்கெழுத்து திறனே கணனியில் சிறந்த ஓர் விற்பனராகத் திகழ்வதற்கு அடிநாதமாக அமைகின்றது.  மிகக் குறுகிய நேரத்தில் சகல கணினித்துறை சார்ந்த வேலைகளையும் செய்து முடிப்பதற்கு  இவரின் தட்டச்சுச் சுருக்கெழுத்து கலையே வித்திடுகின்றது. 

இவ்வாறு நாம் தலைநிமிர்ந்து மற்றவர்களை விஞ்சும் அளவிற்கு நிற்பதற்கு கழகத்தின் ஸ்தாபகரும், தலைவருமாகிய சிவச்சந்திரன் சேர் அவர்கள் உலகறிய வைத்தவர் என்றே கூறலாம்.  இவருடன் இவரின் குடும்ப உறுப்பினரும், சகோதரர்களும் பழகுவதற்கும், ஏனையவர்களுக்கு உதவி செய்வதிலும் சிறந்தவராகக் காணப்படுகின்றனர். இவ்வாறான சமூக அக்கறை கொண்ட வங்கியியலாளரின் இழப்பு  ஈடு செய்யமுடியாதுள்ளது.  வையகத்தில் நல்ல மனிதர்களை இறைவன் நெடு நாட்கள் வாழ விடுவதில்லை என்று கூறுவார்கள். ஆகவே இவ்வாறான ஆளுமை, திறமை, விடாமுயற்சி, நிர்வாகத்திறன் கொண்ட சிவச்சந்திரதேவன் சேர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

"வடமாராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் இனிய நாட்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாதவை".

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

திருமதி. வெண்ணிலா கேதீஸ்வரன் 
ஆசிரியர்,
(யா/வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ்ப்பாணம்.)

Comments