Skip to main content

ஒப்பற்ற தேவனாய் என்றும் எம்முள்... - மைத்துனர்கள்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்

இயற்கைக்கு முரணாக அன்றைய விடிகாலைப் பொழுதில் சூரியன் தன்னொளி இழந்து அஸ்தமித்தது. அந்நொடிப்பொழுதில் நாம் கைத்தடி இழந்த குருடர்களாயினோம். செய்வதறியாது, சொல்வதறியாது பரிதவித்த கணப்பொழுது அது. தேறினோம்….?

ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேரும் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும்
மூரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே

என்ற பாடல் அடிகள் ஆழ்மனதில் வந்தது. பிறப்புண்டேல் இறப்பு முண்டு என்பது இயற்கை நியதி. படுத்துக்கொண்டிருக்கும் போதே மரணம் நிகழ்வது அருமையிலும் அருமை. ஆனால் மரணம் வரும்வரை படுத்துக்கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை என்பார்கள். அத்தானின் மரணம் அவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்டவிலை மதிப்பற்ற பரிசு. எனவே அவரது ஆன்மா என்றும் இறைவனின் தாளில் இளைப்பாறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

அத்தான்என்பது சொல்லளவில் உறவுமுறையே தவிர, எங்கள் குடும்பத்தின் பொறுப்புமிக்க தந்தை அவர். தனது பெற்றோரைப் போன்று மாமன் மாமியை கனம் பண்ணி வயதான நேரத்தில் அவர்களுடன் கைகோர்த்து துணை நின்ற பெறற்கரியமருமகன், நல்வழிகாட்டி, வாழ்க் கையில் சாதிக்க வேண்டியவற்றை நாசூக்காக போதித்தநல்லாசான்”. இல்வாழ்க்கையின் பொருளுணர்ந்து வாழ்ந்தஉத்தம புருஷன், மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்தநற்பிதா, ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியினை மெய்ப்பித்துக் காட்டியசேவையாளன், உற்றார் உறவினரை முகமலர்ந்து உபசரித்துப் பழகும்பண்பாளன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாதஅதிகாரி, இறையருளைப் போற்றும்பக்தியாளன்”. இவ்வாறாக இவரின் பரிமாணங்கள் பற்பல. எவ்வடிவிலும் தன்னிலை மாறாது தனக்குரிய கடமையினைச் செவ்வனே செய்து பார்போற்ற வாழ்ந்தவர். இத்தகைய மாமனிதன் எமக்கு அத்தானாகக் கிடைத்தது நாம் செய்த நல்வினைப்பயனேயாகும்.

எமது தந்தையார் சாதாரண விவசாயியாக இருந்ததால் அவரால் விரும்பிய பல கருமங்களைச் சாதிக்க முடியவில்லை. ஐயாவின் சிந்தனைகளுக்கு என்றும் செயல்வடிவம் கொடுத்தவர் அத்தான். இவர் அக்காவை திருமணம் செய்து எம் இல்லத்திற்கு வருவதற்கு சில ஆண்டுகள் முன்பிருந்து அவரது தொடர்பு தொழில் நிலை சார்ந்து எமக்கிருந்தது. அவரது சுருக்கெழுத்துக்கழக வகுப்பினை தொடங்குவதற்கு உரிய நிலையமாக எமதில்லத்தின் ஒருபகுதியைக் கேட்டபோது ஐயா எதுவித மறுப்புமின்ற சம்மதம் அளித்தார். ஐயாவின் நற்பண்பினையும் உயர்ந்த நற்சிந்தனையையும் அன்று பாராட்டி மகிழ்ந்த அத்தான் பின்னர் அவருக்கே மருமகனாக வரக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி உவகையடைந்த நாட்கள் பல.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி

என்ற குறளடி இவருக்குச் சாலப்பொருந்தும். திருமணத்தின் பின்னர் தனது சகோதரங்களாகவே எம்மை வழிநடத்தினார். எமது வீட்டில் குளியலறை இல்லாதபொழுது தான் வந்த அடுத்த சில மாதங்களிலே பெண்பிள்ளைகள் இருக்கும் வீட்டில் குளியலறை நிச்சயம் இருக்க வேண்டுமெனக் கட்டுவித்தார். எங்கள் இல்லத்தில் பாரம்பரியம்போற்றும் தலைவாசல் உண்டு. அது ஆரம்பகாலத்தில் ஓலையால் வேயப்பட்டு, மண் திண்ணை போடப்பட்டிருந்தது. அத்தான் என்றும் பாரம்பரிய பண்பாட்டுக் கலாசாரங்களைக் கட்டிக்காக்கும் தூரநோக்குடையவர். அம்மா இல்லாத காலத்தில் அதனை சாணி கொண்டு மெழுகிப் பராமரிக்க யாருக்கும் நேரம் இருக்காது. இது இவ்வாறே அழிந்து விடுமெனக்கூறி அதனை ஓட்டினால் வேய்ந்து சீமெந்து திண்ணையாக புதிய பரிமாணத்தில் உருவாக்கினார். எங்களனைவரையும் அவரவர்களுக்கு பொருத்த மான துறையில் ஊக்கப்படுத்தி எல்லோரையும் இன்று அரசதுறையில் பணியாற்றக் கூடிய நிலைக்கு உயர்த்திய பெருமை என்றும் அவருக்குரியதே.

அதுமட்டுமன்றி எங்களனைவரது வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதிலிருந்து திருமணம் வரை தோளோடு தோள் நின்று நிறைவேற்றி உவகையடைந்தார். எங்களது துணையாளர்களையும் தனது சொந்தத் தங்கை, தம்பியர் போன்றே எதுவித பாராபட்சமு மின்றி, அவர்களுடன் அன்புடன் பழகும் பண்பு அனைவரும் பார்த்து வியந்த தொன்று. தன்பிள்ளைகளை எவ்வாறு அன்பாகவும் கலகலப்பாகவும் வைத்திருப்பாரோ அதேபோன்று தனது பெறாமக்களையும் மருமக்க ளையும் அரவணைப்பார். அவர்களும் எதுவித அச்சமோ வயது வேறு பாடு என்ற எண்ணமுமின்றிக் கதைத்துச் சண்டையிட்டு விளையாடு வார்கள். அத்தருணத்தில் ஒரு குழந்தைத்தனம் பொருந்திய குறும்பு அவருள் குடிபுகுந்துவிடும்.

சென்ற வருடம் தனது 25வது திருமணநாளன்று உரையாடும் போது,நான் உண்மையில் இந்த 25 வருடமும் வாழ்ந்த வாழ்க்கை தான் என் வாழ்நாளில் சந்தோசமான நாட்கள்என்றார். உண்மையில் இன்றும் அதனை எண்ணும் போது ஒருவித மனநிறைவைத் தருகிறது. அவர் தனது குடும்பத்திற்கோ, எமக்கோ செல்ல வேண்டிய பாதையைச் செவ்வனே அமைத்துத் தந்துவிட்டார். எனவே இனி அவரது சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையுமே எமக்குண்டு. அத்தானின் இழப்பு எமக்கு பெரும் இடைவெளி. அதனை நிரப்புவதற்கு ஒப்பானவர் யாரும் இல்லை. நாங்கள் எமது வாழ்க்கையில் அவருடன் பயணித்துக் கற்றுக்கொண்டவை ஏராளம். அவர் என்றும் எம்முள் இருந்து எம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவர்வழி நாமும் பயணிப்போம்……

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்.”

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உங்கள் நினைவுகளுடன் உங்கள் வழி பயணிக்கும்,

மைத்துனர்கள்

கிருஷ்ணானந்தம், கிருஷ்ணகுமார், கமலகுமார், கலைவாணி, மதிவதனி, உமா


Comments