Skip to main content

தன்னலமற்ற சிறந்த சேவையாளன்! - செல்லப்பாக்கியம் கிருஷ்ணபிள்ளை

தோன்றின் புகழோடு தோன்று து இலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று

அமரர் திரு... சிவச்சந்திரதேவன் அவர்கள் தனது தன்னலமற்ற சேவையால் பல இளைஞர், யுவதிகளின் நன்மதிப்பைப் பெற்ற புகழ் பூத்த சேவையாளனாக விளங்கினார்.

இவர் வங்கியில் சுருக்கெழுத்தாளராகப் பணிபுரிந்து,யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்ற திருமூலரின் திருமந்திரத்திற்கமைய சுருக்கெழுத்து, தட்டச்சு என்பவற்றைப் பலரும் கற்று, வேலை வாய்ப்பையும் பெற்று வாழ்வில் உயர்வடைய வேண்டுமென்று எண்ணினார். சுருக்கெழுத்து, தட்டச்சுப் பயிற்சி நிலையங்களைப் பல இடங்களில் உருவாக்கினார். ஏழை பணக்காரர், உயர்வு தாழ்வு எனப் பாராது யாவருக்கும் சமநோக் குடன் இப்பயிற்சிகளைப் பயிற்றுவித்தார். தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தி கழகத்தின் பெயரை உயர்வடையச் செய்தார். வசதியற்றவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி வழங்கியதோடு, சிறப்பாகச் சித்தியெய்தியவர்களுக்கு தன் செல்வாக்கினால் வேலை வாய்ப்பினையும் பெற்றுக்கொடுத்து வறுமைப்பட்டவர்களுக்குத் துயர் துடைத்த செம்மல் ஆவார்.

மென்மையான நல் இதயம் படைத்தவர், நல்லவராகவும் வல்லவராகவும் விடாமுயற்சியாளராகவும் விளங்கினார். சுயசிந்த னையாளராக உணர்ந்து வாழ்ந்தவர். செய்ததை செயலில் கண்டு இன்பம் அடைந்தார். தொடர் முயற்சியே அவரின் சுபாவமாக விளங்கியது.

எவருடனும் சினந்து கதைக்கமாட்டார். தன்மனதிற்குப் பிடிக்க வில்லையெனில் விலகிக்கொள்வார். இப்படிப்பட்டவரின் சிறந்த குணங்களையும் தன்னலமற்ற சேவையையும் கண்டு பொறாமையுற்ற சிலநோய்கள் அவரைப் பற்றிப்பிடித்தன. இதனால் தன் உடற் பரிசோதனையை அடிக்கடி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் அவர் கொழும்பு சென்று வாழவேண்டியேற்பட்டது. இருந்தும் தன் உடற்சுகம் குறைவடைந்த நிலையிலும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும் ஆவணி மாத விநாயகர் சதுர்த்தியை முன்னின்று மிகச்சிறப்பாக நடத்தினார். இத்தகைய நற்பண்பாளரின் மறைவு அவருடன் பழகிய யாவருக்கும் பெரும் துயரைத் தந்துள்ளது. இவரின் ஆத்மா சாந்தியடையவும் அவரின் பிள்ளைகள் நன்னிலை அடையவும் எல்லாம் வல்ல பண்டகைப் பிள்ளையாரைப் பிரார்த்திக்கின்றேன்.

திருமதி செல்லப்பாக்கியம் கிருஷ்ணபிள்ளை
ஓய்வு பெற்ற ஆசிரியரும் உறவினரும்
பண்டகை, உடுப்பிட்டி


Comments