“சிவச்சந்திரதேவன்” வங்கி வட்டாரங்கள், சுருக்கெழுத்துக்கழக வட்டாரங்கள் மற்றும் அவரை அறிந்த பெருமக்கள் எல்லோரும் அதிகமாக அழைக்கும் பெயர் இதுதான். அவரைத் தேவன் என்று அழைப்பாரும் உண்டு. ஆனால் அவர் குடும்பத்தினர்கள், உறவினர்கள் எல்லோரும் அவரைச் சந்திரன் என்றே அழைப்போம். அவர் முழுப்பெயரில் சந்திரன் என்ற சொல் அடங்கியிருந்தாலும் அவர் முகத்தோற்றத்தில் அந்த நிலவின் சாயலும் ஒளிப்பதைக் காணலாம்.
என்
தாயாரும் அவரின் தாயாரும் சகோதரங்கள். நான் பிறந்ததும் அவர்
பிறந்தும் ஒரே ஆண்டில்தான். மாதமளவில்
நான் மூத்தவனாக இருந்தாலும் என்னையும் அவர் சந்திரன் என்றே
அழைப்பார். காரணம், என் பதிவுப்பெயர் வேறாக
இருந்தாலும் என்னையும் என் பெற்றோர் சந்திரன்
என்றே செல்லமாக அழைத்து வந்துவிட்டார்கள். அதனால் என்னுடன் கல்வி கற்றவர்போக மற்றவர்கள் எல்லோரும் என்னையும் சந்திரன் என்றே அழைப்பர். இது விடயத்தில் இருவருக்கும்
ஓர் இன்பத் திருப்தி உண்டு.
“தான்
ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”
என்பது ஓர் உண்மை மொழி.
அவரைப் பொறுத்தளவில் நான் அதை நேரில்
அனுபவித்திருக்கின்றேன்.
என் மூத்த புதல்வி க.பொ.த.
உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதியைப்பெறப் போதுமான புள்ளிகள் எடுக்கவில்லை. அச்சமயத்தில் வீடுதேடி வந்து ஆறுதல் சொல்லி அவரை வடமராட்சி சுருக்கெழுத்துக்
கழகத்தில் இணைத்து பயிற்றுவித்ததோடு, அங்கு நடைபெற்ற கலைவிழாக்களிலும் அவரைப் பங்குபெறவைத்து பலரின் பாராட்டுகளையும் பெற வைத்தவர். இவை
என்றும் மறக்க முடியாதவை. தற்காலிகமாக வங்கியொன்றில் பணிபுரிந்த அந்த மகள் மணம்முடித்து
லண்டன் சென்றமை வேறுவிடயம்.
என்பிள்ளைகளின்
விவாக முகூர்த்த நாட்களில் கொழும்பில் இருந்தாலும் வருகைதந்து அவர்களை ஆசீர்வதித்து பின் சந்தோஷமாகக் கலந்துரையாடிச்
செல்வார். மற்றும் வேறு காரணங்களால் ஊருக்கு
வரும்போதெல்லாம் உடுப்பிட்டிலிருந்து வீடுதேடி வந்து சந்தித்துச் செல்வார். இவற்றை நினைக்கும்போது அவர் இழப்பு மனதை
வாட்டுகின்றது.
நான்
கடந்த 6 வருடங்களாக வருடத்திற்கு ஒரு முறை அவுஸ்ரேலியா
சென்றுவரும் வழக்கமுண்டு. கடந்த மார்ச் மாதம் நான் திரும்பியிருந்தேன். அந்த மாதத்தில்
ஒரு நாள் இரவு தொலைபேசி
அழைப்பொன்று வந்தது. பேசத் தொடங்கியதும் “ஆ! சந்திரனே எப்ப
வந்தது” என்று பேசத் தொடங்கியவர் அரை மணி நேரத்திற்கு
மேலாகப் பேசிக்கொண்டிருந்தார். சொய்சாபுர வீட்டிலிருந்து மாறி வெள்ளவத்தை வந்தது
முதல் குடும்ப நிலைமை, வருமான நிலைமை, வீரகேசரிக்கு வேலைக்குச் சென்ற மகன் ஊரடங்குப் பிரச்சினையால்
பணிக்குப் போகமுடியாமை போன்ற பல விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
கொழும்பு வரும்போது வெள்ளவத்தை வீட்டுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இத்தனை நேரத்திலும் தன் உடல்நிலைபற்றி எதுவுமே
பேசவில்லை. இப்படி நீண்டநேரம் பேசும்போது ஏன், ஒருகாலமும் இல்லாமல்
இன்று இப்படியெல்லாம் பேசுகிறார் என்று என்மனம் வேறு திசையில் சென்ற
உண்மையை இந்த நேரத்தில் மனவேதனையோடு
கூறியே ஆகவேண்டும். அதன் பிரதிபலிப்பை அவர்
உயிர் பிரிந்த செய்தி கேட்டு அனுபவித்தேன்.
அதிகாலை
மூன்று மணிக்கெல்லாம் கண்விழித்துப் பேசியவர் எந்த அசைவுமின்றி, உபாதை
எதையும் வெளிப்படுத்தாமல் அப்படியே நிரந்தரமாய் உறங்கிவிட்டார் என்றால் ஆண்டவன் அன்போடு அமைதியாக அழைத்துவிட்டார் என்பதுதான் உண்மை! அவர் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்
என்பது எல்லோரும் வழக்கமாக இறுதியாக முடிக்கும் வார்த்தை. ஆனால் அவர் ஆத்மா சாந்தியடைந்து
ஆண்டவன் பாதங்களை அடைந்து விட்டார் என்பது உறுதி!
வீ.வைரவநாதன் (சந்திரன்)
Comments
Post a Comment