Skip to main content

உயர் பண்புமிக்க உத்தமர் அமரர் வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் - அருந்தவராணி விஸ்வகுமார்

செக்கச் சிவந்த நிறம், புன்முறுவல் பூத்தமுகம், மென்மையான உள்ளம், இனித்த பார்வை, இதமான வார்த்தைகள், மற்றவர் மனம் கோணாமல் பேசும் பண்பு ஆகிய உயர் குணங்கள் அவரின் பெயருக்கு ஏற்றாற்போல ஒருங்கே அமைந்திருந்தது விசேட சிறப்பம்சமாகும்.

அமரர் வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் அவர்கள் இன்று நம்முடன் இல்லை. புற்றளை, புலோலியைச் சேர்ந்த அன்னார் 1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது மைத்துனி அன்பும் பண்பும் நிறைந்த கிருஷ்ணகுமாரியைக் கரம்பிடித்தார். மக்கள் வங்கியில் 31 வருடங்கள் சேவையாற்றியபின் 2006ஆம் ஆண்டு இளைப்பாறினார். 1987 இலிருந்து நானும் எனது குடும்பமும் கொழும்பில் வசித்தபடியால் அக்கால போர்ச்சூழல் காரணமாக யாழ்ப்பாணத்தில் வசித்த எமது உறவுகளின் இன்ப துன்பங்களில் பங்குபற்ற முடியாமல் போய்விட்டது. அதேகாரணங்களால் இவர்களது திருமண வைபவத்திலும் கலந்து கொள்ளமுடியாமல் போனது. பின்னர் 1999ஆம் ஆண்டு அன்னாரின் இருதயநோயின் நிமித்தம் காலஞ்சென்ற எனது அண்ணா கலாநிதி மகாலிங்கசிவம் அவர்களின் வெள்ளவத்தையிலுள்ள இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அத்தருணம் எனது அண்ணா சிறந்த இருதயநோய் நிபுணத்துவம் பெற்ற வைத்தியரிடம் சிகிச்சை பெறத் தேவையான ஒழுங்குகளைச் செய்துகொடுத்தார். போக்குவரத்துத்தடை இருந்த அக்காலத்தில் சிரமத்துடன் மீண்டும் அண்ணா வீட்டிற்கு வந்து சிகிச்சை பெற்றுச் சென்றார். அந்த உதவியை அமரர் என்றும் நன்றியுடன் நினைவுகூருவார்.

இக்காலகட்டத்தில்தான் எனக்கும் அவருக்குமிடையில் அறிமுகம் ஏற்பட்டது. 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் குடும்பத்துடன் கொழும்பு, சொய்சாபுர இல்லத்திற்கு வந்தபிறகு எமது உறவு மேலும் வலுப்பெற்றது. காணும்போதெல்லாம் இன்முகத்துடன் அளவளாவுவோம். கடைசியாகஇ மதிவதனியின் கணவர் அகாலமரணமடைந்த புஷபகுமாரவின் இறுதிக்கிரியை நடந்தபோது அன்னார் எனது கணவருடன் நீண்டநேரம் அளவளாவிக்கொண்டிருந்தார். அந்த சந்திப்புத்தான் கடைசியானதாக இருந்து என்பதை நினைக்க எமது மனம் மிகுந்த வேதனையடைகின்றது. அன்பு நிறைந்தவர்களைச் சந்திக்கின்றோம். எங்கே சந்திக்கின்றோம், எப்போது பிரியப்போகின்றோம் என்பதை அறியமுடியாத இவ்வுலக மானிட வாழ்க்கை நிச்சயமற்றதொன்றாகும். மனித வாழ்வு நிலையற்றது என்பதை நாம் அறிந்திருந்தபோதும் எமது மனதுக்கு இனியவர்கள் நம்மைவிட்டுப் பிரியும்போது, அதுவும் திடீரென ஏற்பட்டால் அப்பிரிவு தாங்கொணாதது. ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதல்ல, எப்படி வாழ்ந்தார் என்பதே அவரின் முக்கியத்துவத்தை உணர வைக்கின்றது. அமரர் சிவச்சந்திரதேவன் அவர்கள் பாலசிங்கம் மாமாவின் மூத்த மருமகனாகக் கிடைத்தது அவர்கள் செய்த பாக்கியமே

அன்னாரின் பிரிவால் துயருறும் சிறகொடிந்த அன்றில் பறவைகள் போன்ற அருமை மனைவி, பாசமிகு பிள்ளைகள், ஏனைய குடும்ப உறுப்பினர்கள் யாவருக்கும் எமது இதயபூர்வமான ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் இறுதிக் கிரியையில் பங்கு கொள்ளாத முடியாத குறையையிட்டு வேதனையுறும் எமக்கு இவ் இரங்கல் செய்தியினைத் தெரிவிக்கக் கிடைத்த சந்தர்ப்பம் சிறு ஆறதல் அளிக்கின்றது. இந்த அரிய வாய்ப்பினை எமக்களித்த அன்னாரின் மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா இறைவனடியில் சாந்திபெற மனமாரப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


மகாலிங்கசிவம் குடும்பம்,
புஷ்பராணி குடும்பம்,
கிருஷ்ணசிவம் குடும்பம் சார்பாக
அருந்தவராணி விஸ்வகுமார்


Comments