“மண்ணில்
பிறந்தவர் மாண்டு மறைதல் திண்ணம்.” அந்த வகையில், திரு.க.வ. சிவச்சந்திரதேவனின்
வாழ்வில் காலக்கணக்கும் 2020.05.23 அன்றுடன் முடிந்துவிட்டது என்ற துயரச் செய்தியை
இன்னும் எனது மனம் ஒப்பமறுக்கிறது.
காரணம்இ எனக்கும் அவருக்கும் 30 வருடங்களுக்கு மேலான நட்பு. அவருடன் நான் பழகக் கிடைத்த
- இருந்த ஒவ்வொரு தருணமும் இன்னமும் எனது மனக்கண்முன் நிழலாடுகின்றது.
அன்பு, அமைதி, அடக்கம், மற்றவர்களை மதித்தல், அவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்த்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற உயர்ந்த விழுமியங்கள் அவரிடம் குடிகொண்டிருந்தன.
சால்புடையோர்
நால்வரைத் தனது வாரிசுகளாகப் பெற்ற
சந்திரன், தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்
என்றும் சந்திரனாகவே வாழ்ந்திருந்தார். தனது குடும்பத்திற்கு மட்டுமன்றி
தன்னைச் சார்ந்தவர்களின் உயர்வுக்கும் ஊன்றுகோலாக நிற்கும் நல் உள்ளம் கொண்டவர்
அவர். நெல்லியடி, வதிரிச் சந்திக்கு அருகாமையில் இயங்கிவந்த சுருக்கெழுத்துக் கழகத்தின் மூலம் அங்கு பயிலவந்த இளைஞர், யுவதிகளின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக அமைந்திருந்தமையை அச்சமூகம் என்றும் பறைசாற்றி நிற்கும்.
வெடுக்கெனவே
உரத்துப் பேசும் வார்த்தைகளினுள்ளும் அர்த்தமுள்ள கருத்துக்கள் நிறைந்திருக்கும். ஒருவரைப் பிடித்துவிட்டால் அவரிடம், “நீ பேசும் மொழி
கேட்டு கல்லும் கனியுமல்லவா? பிறந்த ஊருக்கு மட்டுமன்றி புகுந்த ஊருக்கும் பெருமை சேர்த்த புண்ணியனே! நீ மறைந்தாலும் உன்
நினைவுகள் நம் உள்ளங்களில் மறையாது
இருக்கும்.”
பண்டகைப்
பிள்ளையார் கோயிலுக்கு நீ செய்த நிதியுதவிகள்
உள்ளிட்ட அனைத்து சேவகங்கள் ஆன்ம ஈடேற்றம் நோக்கிய
உனது தேடல்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. நாம் வாழும் கால
எல்லை மட்டுமே நம் கையில் உள்ளது
என்பதைப் புரிந்துகொண்டு நீ வாழ்ந்த திட்டமிட்ட
வாழ்வு நெறிகளை நம் வாழ்வுக்குக் கட்டமிட்டுச்
சென்றதை நீ அறிவாயா? பகவத்கீதையிலே
பகவான் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு உபதேசிக்கும்போதுஇ “இப்பிறப்பிலே பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனக்கு இடப்பட்ட கர்ம அனுஷ்டானங்களை முறைதவறாது
செய்துவருவானாயின் அவன் முத்தி உலகை
அடைவான்” எனக் கூறுகிறார். அத்தானாக
மந்திரத்தையே தன் வாழ்வின் இலட்சியமாகக்கொண்டு
வாழ்ந்த கன்ம வீரனின் ஆத்மாவும்
முத்தி உலகையே அடையும் என்பது வெள்ளிடைமலை.
“உள்ளுவதெல்லாம்
உயர்வு உள்ளல்” எனும் உலக ஞானம் தனைப்
பற்றிப் படர்ந்ததும் (விட்டுச்சென்றதுமான) அவரது வாழ்வியற் கோலங்கள் இவ்வுலகில் வாழும் நம் எல்லோருக்கும் வழிகாட்டும்
ஒளிக் கீற்றுக்களாக மின்னிக்கொண்டேயிருக்கும்.
காலநதியும்
மீண்டும் திரும்பிடுமா?
கலியகற்றும்
வீழருவியும் மீண்டும் மலையேறிடுமா?
இதுபோன்றதே
ஜனன மரணம் இது இயற்கையின் நியதி‚
அதை மாற்றும் வல்லமை மானிடருக்கு இல்லை என்பதை உணர்ந்து அனைவரும் சாந்தி அடைவோமாக‚
தாமோதரம்பிள்ளை
மகாதேவன்
ஓய்வுநிலை
ஆசிரியர்,
பண்டகை, உடுப்பிட்டி.
Comments
Post a Comment