Skip to main content

இந்நாள் வரை உங்களுடன் நான்! - த.சூரியகுமார்

1989, 1990 காலப்பகுதியில் இளைஞர்களாக நாம் வாழ்ந்த வாழ்க்கை முறை சுவை நிறைந்ததும், சுமை நிறைந்ததும், பல வலி நிறைந்ததுமாகும். நாட்டுச்சூழல், வீட்டுச்சூழல் என்பன எமக்குப்பல பாடங்களைக் கற்றுத்தந்த காலமது. அப்போது நான் உயர்தர வகுப்புக் கற்றுக்கொண்டிருந்தேன். மாலைவேளைகளில் நானும் எனது நண்பர்களும் உடுப்பிட்டி வாசிகசாலையடியில் ஒன்றுகூடுவோம்.

அப்போது உடுப்பிட்டியில் எனது உறவினர் வீட்டில் சுருக் கெழுத்து, தட்டச்சுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அது ஒரு தொழில்சார் கல்வி நிறுவன மாதலால் நாமும் உயர்தரப் பரீட்சையின் பின்னர் அதில் இணைந்து பயில வேண்டுமென்ற பேரவாவில் இருந்தோம். அதன் ஸ்தாபகரான சிவச்சந்திரதேவன் ளுசை யாழ்ப்பாண மக்கள் வங்கியில் பணியாற்றி வந்தார். அவர் தினமும் மாலைவேளையில் எதுவித போக்குவரத்து வசதிகளற்ற அந்தப் போர்க்காலச் சூழலில் வல்லைவெளியு+டாகச் சோளகக் காற்றின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் சைக்கிளில் வேலை முடித்துவிட்டுத் தனது கழகத்திற்கு வந்து கற்பித்தல் பணியை தொடர்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது கடமையுணர்வும் சேவை மனப்பான்மையும் கடின உழைப்பும் எனது மனதில் அன்றே பதிந்ததொன்று. அவரை ஒருசழடந அழனநடஆக நான் ஏற்ற தருணம் அது. அவர் மேலுள்ள மதிப்பினாலும் விருப்பினாலும் கிருஷ்ணகுமாரி அக்காவுடன் நாங்கள் சகோதரி போன்று பழகியமையாலும் 1990இல் எமது பாடசாலையான அமெரிக்கன் மிஷனில் நடந்த கழக ஆண்டு விழாவின் போது நானும் எனது நண்பர்களும் எமது குடும்பவிழா போன்று நின்று அனைத்து ஒழுங்கமைப்பினையும் செய்து கொடுத்த நினைவு இன்றும் பசுமையாகவுள்ளது.

பின்னர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் 1994இல் நான் ஊரிலிருந்து வெளிநாடு செல்வதற்காகத் திருகோணமலைக்குச் சென்றிருந்தேன். அதுவொரு கசப்பானதும் வலிநிறைந்ததுமான பயணமாக இருந்தது. ஆனாலும் தவிர்க்க முடியாததொன்றாக இருந்தது. அவ்வேதனை நிறைந்த நாட்களில் உண்மையில் ஓர் சந்தோஷமான செய்தியைக் கேள்வியுற்றேன். அது சிவச்சந்திரதேவன் ளுசை, கிருஷ்ணகுமாரி அக்காவின் திருமணம். அவர் எனக்கு ஒரு அத்தானாக வந்துள்ளமையை அறிந்து நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். அவர் எனக்கு உறவுமுறையில் அத்தான் இல்லாவிடினும் அக்கா என்றும் எனக்கு அனைத்து விடயங்களிலும் சிறுவயதிலிருந்தே சகோதரி போன்று அன்பாய் இருந்தவர். அதிலிருந்து எனக்குக்கிடைத்த உறவுதான் அது. 1998இல் நான் பெரியம்மா வீட்டில் இருக்கும் போது அக்காவும் அத்தானும் கப்பல் மூலம் வந்து எம்முடன் திருகோணமலையிலேயே சிலநாட்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது நான் அவரின் உறவினர் என்ற உரிமையுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

2005ஆம் ஆண்டு கனடாவிலிருந்து முதன்முதலாக ஊரிற்குச் சென்றபோது அக்கா வீட்டிற்குச் சென்றேன். அன்றும் அதே சிரிப்பும் கலகலப்புடன் நான்கு அழகிய குழந்தைகளிற்கு அப்பாவாக இருந்தார். அவரது நற்குணத்திற்கு அவருக்கு கிடைத்த வரமாகவே அந்த அழகான குடும்பத்தைப் பார்த்து இரசித்தேன். அது ஒரு இரவுப்பொழுது, பலசுவை நிறைந்த உரையாடலின் பின் வீடு வந்தேன். பின்னர் சில தடவைகள் அவரைச் சந்தித்துப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒருநாள் அக்குடும்பத்துடன் இராப்போசனம் உண்ணும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் தனது கழக வளர்ச்சி பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்தார். இப்போதும் கழகமே அவரது உயிர்மூச்சு என்பதை அவரது உரையாடல் மூலம் அறிந்துகொண்டேன். அவர்களது கழக மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் தைப்பூச தினத்தன்று தில்லையம்பலப் பிள்ளையார் கோயிலுக்குப் பொங்கல் செய்வதாகவும் என்னையும் அவ்வருடம் வந்து கலந்துகொள்ளுமாறும் அன்று என்னிடம் கேட்டார். நானும் எதுவித மறுப்புமின்றிச் சென்றேன். அந்நாள் எனது வாழ்க்கையின் கால்கோள். எதிர்பாராத விதமாக அவ்வாலயம் எனது கடந்தகால வாழ்க்கை அனுபவங்களை என்னவளுடன் மீட்டிப்பார்க்க கூடிய இடமாக அமைந்தது. அதற்கு அத்தானுக்கு என்றும் நன்றியுடையவனாவேன்.

அதன் பின்னர் ஒரு சில தினங்களில் எனது பதிவுத்திருமணம் அத்தானின் மச்சாளாகிய உமாவுடன் நான் விரும்பியவாறு நிறை வேறியது. அதனை முன்னின்று நடத்திவைத்தார். அன்றிலிருந்து அவர் எனக்கு சகலரானார். இருந்தும் இன்றும் நான் அவரைஅத்தான்என்றே அழைப்பது வழக்கம்.

விதியின் செயலோ அல்லது பிரிவுதான் உறவுக்குப் பலம் என்ற வாக்கினை மெய்ப்பிப்பதற்காகவோ சில குடும்ப மனக்கசப்புகளால் எம்மிடையே சில காலம் மனவருத்தங்கள் நிறைந்த இடைவெளி இருந்தாலும் அதுவே எங்களது அன்பிற்கும் அவரைப்பற்றிப் புரிந்து கொள்வதற்கும் சிறந்த களமாக இருந்தமையை மறுக்கமுடியாது. பலவேளைகளில் முன்பு நடந்த சில கசப்பான சம்பவங்களை வேதனையுடன் நினைவுகூர்ந்ததுமுண்டு. பின்பு பல தடவை இலங்கைக்கு குடும்பசகிதம் சென்றசமயங்களிலும் அவருடன் மனம் திறந்து பழகும் வாய்ப்பு பெரிதாகக் கிடைக்கவில்லை. எனது திருமணத்தின் பின்னர் நான் ஊருக்குச் செல்லும் ஒவ்வொரு வருடமும் தில்லையம்பலப் பிள்ளையாருக்கு பொங்குவதை அன்றிலிருந்து வழக்கமாக்கிக் கொண்டேன். 14 வருடங்களின் பின்னர் சென்ற வருடம் அத்தானும் எங்களுடன் அவ்வாலயத்திற்கு வந்து கலந்து கொண்டார். அவ்வருடப் பொங்கல் எனக்கு என்றுமில்லாத திருப்தியைத் தந்தது. 14 வருடமாக இப்படியான ஒரு சந்தர்ப்பத்திற்காக நானும் மனைவியும் காத்திருந்ததுண்டு. நிறைவாக எம்மிருவருக்கும் கிடைத்த மகிழ்ச்சி அதுவே. அத்துடன் சென்றவருடம் பல நாட்கள் அவருடன் ஒரே வீட்டிலிருந்து பழகும் இனிய சந்தர்ப்பத்தையும் இறுதியாக இறைவன் எனக்கு தந்திருந்தார்.

வெள்ளவத்தையில் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டுமென்பது எனது நீண்டகால ஆசை. அதுபற்றி அத்தானுடன் கதைத்தபோது அவர் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முன்வந்து அதனை நிறைவேற்றித்தந்தார். இறுதியாக அதே வீட்டில் அவருடன் இருந்து பல விடயங்களை கலந்துரையாடி மனமகிழ்ந்து ஒன்றுசேர்ந்து இருந்தமை என்வாழ்நாளில் மறக்கமுடியாதவை. அவர் எனக்கு பல விடயங்களில் முன்மாதிரியாக இருந்தார். இன்னும் அவரிடமிருந்து கற்க வேண்டியவை ஏராளம். அத்தருணத்தில் அத்தானை இழந்தமை என் துர்ப்பாக்கியமே. அவரின் அன்பும், புறம் பேசாது நேரே தன் கருத்துக்களை கூறும் நேர்மையும். அனைவருக்கும் தன்னலம் பாராது உதவி செய்யும் பண்பும் நான் அவரிடம் கற்ற விலைமதிப்பற்ற வாழ்க்கைப் பாடங்கள்.

அத்தான் இல்லாத அக்குடும்பத்தை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அத்தானை இழந்து தவிக்கும் அக்காவிற்கோ, பிள்ளைகளுக்கோ ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகளில்லை. அவர் அன்றுபோல் என்றும் உங்களுடன் இருந்து நல்வழிப்படுத்துவார் என்ற மனஉறுதியுடன், அவரின் ஆத்மா என்றும் அவரது மரணம் போன்று அமைதியாக இறைவனுடன் இரண்டறக்கலக்க எல்லாம் வல்ல பண்டகைப் பிள்ளையாரைப் பிரார்த்திக்கிறேன்.

என்றும் அன்பும், மதிப்பும் கொண்ட

.சூரியகுமார்


Comments