Skip to main content

பெரிய பெரியப்பாவின் பெருமிதம்! - இபவத்ஷன் & வத்ஷாங்ஹிதன்

நான் நிறையக் காலமாக தனிய அம்மா - அப்பாவின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்தேன். ஏன், அவர்களுக்கு மட்டும் அல்ல, வீட்டில் எல்லோருக்குமே நான் தான் செல்லப்பிள்ளை. பெரிய பெரியப்பா என்னை செல்லமாகஇபன்என்று கூப்பிடுவார். நான் அதிகமாக பாடசாலை விட்டு வந்த பின்னர் மாலை வேளைகளில் பெரிய பெரியப்பாவுடன் தான் இருப்பேன். என்னை அழவிடாமல் எனக்கு விளையாட்டுக் காட்டி, குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி, எனக்கு அம்மாவின் நினைவு வராதபடி என்னை அம்மா வரும்வரையும் வைத்திருப்பார். அம்மா வரும்போது பெரிய பெரியப்பாவுடனும், அண்ணாக்களுடனும், அக்காவுடனும் விளையாடி, சாப்பிட்டு நித்திரை ஆகிவிடுவேன். பிறகு எனக்கு தம்பி வந்ததன் பின் எல்லோரிடமும் இருந்தது எனது தனிச்செல்லம் குறைந்தது. எனக்கு தம்பியில் கோவம் கோவமாக வரும் தம்பிக்கு நான் அடிப்பதும், அழவைப்பதும் எனக்குத் தனிவிருப்பம். அப்போது எல்லாம் என்னை இபன் இஞ்சை வா! வாடா! எண்டு கூப்பிட்டு உன்ரை தம்பி தானே, ஒரு தம்பி தானே பாசமாய் இருக்க வேணும் எண்டு சொல்லித்தருவார். தம்பியை தனது கால் இரண்டிலும் தூக்கி குதிரை ஆட்டுவார். பெரிய பெரியப்பா எனக்குத் தம்பி வந்ததன் பின் அவனையும் என்னைப் போல வீட்டில் வைத்திருந்து சாப்பாடு ஊட்டி, விளையாட்டுக்கள் காட்டி, விளை யாட்டுப் பொருட்கள் எல்லாம் கொடுத்து விளையாட விட்டு நித்திரை யாக்குவார். எங்களுக்கு பெரியப்பாவோடு இருக்கும் போது அம்மா அப்பாவின் நினைவு வராது. எனக்கும் தம்பிக்கும் அண்ணாக்கள், அக்கா விளையாட்டுக்குக் கூட அடிக்கவிடாமல் இடையில் தான் நின்று மறிப்பார். அப்போது அவர்களையும் சமாதானப்படுத்தி, எங்களையும் பாதுகாப்பார் பெரிய பெரியப்பா.

நானும் தம்பியும், பெரிய பெரியப்பாவுடன் எங்களின் அப்பாவோடு விளையாடுவது போல அவரோடு விளையாடுவோம். நான் நிறையக் காலம் பெரிய பெரியப்பாவுடன் தான் இருந்தேன். கொரோனா விடுமுறையைக் கூட நான் பெரிய பெரியப்பாவுடன் தான் கூடிய காலம் கழித்திருந்தேன். அப்போது எல்லாம் அண்ணாக்களை அக்காவை விட எனக்குத் தான் எல்லாவற்றிலும் முதல் இடம் தருவார். ஆனால் நான் படிக்காது இருந்தால் அவருக்குப் பிடிக்காது. உன்னுடன் கோபம் இபன் கதைக்கமாட்டன் என்று செல்லாமாய்க் கூறிவிட்டு பிறகு என்னை கூப்பிட்டு தமிழ்ப் புத்தகங்கள் தருவார். நிறைய வாசி வாசி எண்டு, நான் படங்கள் வரையும் போதெல்லாம் என்னைப் பாராட்டுவார் நீ நல்ல கெட்டிக் காரனாய் வருவாய் படியப்பு எண்டு சொல்லுவார், அது இப்பவும் எனது காதுகள் இரண்டிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

சனிக்கிழமை காலையில் அம்மா எங்களை நித்திரையால் எழுப்பி பெரிய பெரியம்மா வீட்டை போக வேண்டும் என அழுது கொண்டு வெளிக்கிடச் சொன்னா. நித்திரைக்கிடையில் என்ன என்று ஒண்டும் புரியவில்லை நானும் தம்பியும் வெளிக்கிடும் போது பெரியம்மாவும் வந்துவிட்டா அப்போது பெரியம்மாவிடம் கேட்டோம் ஏன் அழுகிறீங்கள். பெரிய பெரியப்பாவுக்கு என்ன நடந்தது எண்டு பெரியம்மா சொன்னா. அப்பவும் புரியவில்லை. வேகமாக நாங்கள் பெரிய பெரியப்பாவைப் பாக்க பெரியம்மாவுடன் நானும் அம்மாவும் தம்பியும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தோம். நிறைய ஆட்கள், பெரிய பெரியம்மா, அண்ணாமார், அக்கா எல்லாரும் அழுகிறார்கள் பெரிய பெரியப்பா மட்டும் நித்திரையாக இருந்தார். அப்போது தான் நான் தெரிந்து கொண்டேன். பெரிய பெரியப்பா, அப்பா மாதிரி எங்களை விட்டு போய்விட்டார் என்று, அந்த வேளையில் தான் மீண்டும் ஒரு அப்பாவை இழந்தோம்.

பெரிய பெரியப்பாவின் செல்லப்பிள்ளைகளான

இபவத்ஷன், வத்ஷாங்ஹிதன்


Comments