Skip to main content

சிதறல் வார்த்தைகள் - ஆசையய்யா குடும்பம்

அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

எனும் குறள்வழிப் போதனையைத் தன் இல்லற வாழ்விலும் அதற்கு அப்பாலும் கடைப்பிடித்து வந்தவரே நாம்அத்தான்எனக் கதைத்துக் கொள்ளும் திரு. சிவச்சந்திரதேவன் அவர்கள்.

பெரியப்பா குடும்பம் அத்தாரை மூத்த மருமகனாக அடைந்ததைப் பெரும் பேறாகக் கருதினார்கள். நாமும் இவரை எம் சகோதரர்களுள் மூத்த புதல்வராகக்கொண்டு எம் குடும்பக் கைங்கரியங்களை நடாத்த முதல் அழைப்பு இவருக்கேநிகழ்வுகளில் எத்தருணத்தில் எதைக்கூற வேண்டுமோ அதனை நகைச்சுவையாகவும் இலாவகமாகவும் கூறி, அச்செயலைத் திறம்பட செயற்படுத்தும் வாய்ச்சொல் வீரரும்கூட.

இவர் பற்றியதான நினைவுகூரல்களைக் கதைத்துக்கொண்டே போகலாம். அதனை எழுத்துருவிற்குக் கொண்டுவந்து இத்தாளுக்குள் அடைக்கலப்படுத்துவது என்பது எமக்குச் சற்றுக் கடினமான காரியமே!

எமது உறவினர், நண்பர்கள், ஊர் மக்கள், பிற இடமக்கள் யாரைக் காணும்பொழுதும் அத்தாரின் சமூகசேவை, பழகும் இனிய பண்பு, இவைகளுடன் தட்டச்சு - சுருக்கெழுத்துப் படிப்பிப்பதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் அவருக்குள்ள ஆர்வம் பற்றியே அதிகம் பேசுவர். இவர்களின் கூற்றுக்கமைய அத்தாரும் இளம் சமூகமாயின் அவர்களின் படிப்பு, வேலை விடயமாகவும், பெரியவர்களாயின் சமூக, சமய விடயங்கள் பற்றியும் கதைத்து மகிழ்வார்.

இவர் நெல்லியடி மக்கள் வங்கியில் சேவை செய்துவரும் வேளையில் யார் வங்கிக்குச் சென்றாலும் உடனடியாக அவர்களின் தேவைகளைக் கேட்டு, செய்வித்து அனுப்புவதிலும் யார் உதவி கேட்டாலும் உடனடியாக தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதிலும் மிக்க சிறப்பு வாய்ந்தவர்.

இன்று என்றும் வரப்போவதில்லைஎன்பதை இவர் வாழ்வு இயம்பிவிட்டது. குறித்த 90 நாட்களில் காண்போரைக் கண்டு, கதைப்போருடன் கதைத்து, 90 மணித்தியாலங்களில் குடும்ப அங்கத்தவர்களின் கடமைகளைப் புலப்படுத்தி, 90 நிமிடங்களில் கடவுளடி இணைந்துவிட்டார்.

சலனமற்று சடுதியில் பிரிந்திட்ட அத்தாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதிலும் இவரின் பிரிவினால் துயருற்றிருக்கும் எமது உடன்பிறவா சகோதரியின் குடும்பத்தினரது துயரிலும் ஒன்றாக இணைந்துகொள்ளும் நாம்...

 

ஆசையய்யா, ஆசையம்மாவின்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்,
உடுப்பிட்டி.


Comments